நகராட்சி, மாநகராட்சி மட்டுமின்றி பேரூராட்சியிலும் ஏரியா சபை: முதல்வருக்கு கமல் வலியுறுத்தல்

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் | கோப்புப் படம்
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: "விரைவில் ஏரியா சபை, வார்டு கமிட்டிகள் நடைமுறைப்படுத்தப்படும் என்ற தமிழக முதல்வரின் அறிவிப்பை மக்கள் நீதி மய்யம் சார்பாக வரவேற்கிறேன்.
அதேசமயம், இதை நகராட்சி, மாநகராட்சிகளில் மட்டுமல்லாமல் பேரூராட்சிப் பகுதிகளிலும் நடைமுறைப்படுத்த வேண்டும்" என்று மநீம தலைவர் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''நகர்ப்புற உள்ளாட்சிகளில் மக்கள் பங்கேற்புடன் கூடிய மக்களாட்சி நிலைபெற ஏரியா சபை மற்றும் வார்டு கமிட்டி அமைப்புகளை நடைமுறைப்படுத்த மக்கள் நீதி மய்யம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தது. கடந்த பிப்ரவரி 21-ம் தேதி தமிழக தலைமைச் செயலாளரிடம் மனு கொடுத்தோம். 12 ஆண்டுகளுக்கு முன்னரே சட்டமியற்றப்பட்டு இன்னமும் செயல்பாட்டுக்கு வராத இந்த அமைப்புகளை உடனே நடைமுறைப்படுத்த வலியுறுத்தி தமிழகம் முழுக்க உள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகளும் மனு கொடுத்தார்கள்.

சமீபத்தில் நடந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை, வனத்துறை அலுவலர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட தமிழக முதல்வர் விரைவில் ஏரியா சபை, வார்டு கமிட்டிகள் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவித்துள்ளார். தமிழக முதல்வரின் இந்த அறிவிப்பை மக்கள் நீதி மய்யம் சார்பாக வரவேற்கிறேன். பாராட்டுகிறேன்.

அதேசமயம், இந்த நடைமுறையை நகராட்சி, மாநகராட்சிகளில் மட்டுமல்லாமல் பேரூராட்சிப் பகுதிகளிலும் நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்குரிய சட்ட திருத்தத்தை தமிழக அரசு கொண்டுவரவேண்டும் என்று தமிழக முதல்வரை வலியுறுத்துகிறேன்'' என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in