Published : 14 Mar 2022 08:19 AM
Last Updated : 14 Mar 2022 08:19 AM

தமிழக கல்வித் துறையில் புதிய திட்டங்கள்: முதல்வருக்கு முன்னாள் துணைவேந்தர் இ.பாலகுருசாமி பாராட்டு

சென்னை: தமிழக கல்வித் துறையில் பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தி வருவதற்காக முதல்வர் ஸ்டாலினுக்கு முன்னாள் துணைவேந்தர் இ.பாலகுருசாமி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய முன்னாள் உறுப்பினரும், இபிஜி அறக்கட்டளைத் தலைவருமான பேராசிரியர் இ.பாலகுருசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அண்மையில் கல்வித் துறையில் தமிழக முதல்வரால் தொடங்கிவைக்கப்பட்ட பல திட்டங்களை கல்வியாளர்கள் பெரிதும் வரவேற்கிறார்கள்.

குறிப்பாக, இல்லம் தேடிக் கல்வி, நான் முதல்வன் ஆகியதிட்டங்கள் மிகவும் பாராட்டத்தக்கவை. தமிழக இளைஞர்களை மேம்படுத்த அவை மிகவும் உறுதுணையாக இருக்கும். திறன் சார்ந்த கல்வியும், பயிற்சியும் பாடத் திட்டத்தில் கட்டாயமாக்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பு, வெறும் பட்டங்களை வழங்காமல். வேலைவாய்ப்பு தரக்கூடியதாக கல்வியை மாற்றும்.

இந்த விஷயங்கள் அனைத்தும் தேசிய கல்விக் கொள்கை 2020-ல்இடம்பெற்றுள்ளன. இந்திய இளைஞர்களை புதுமை உடையவர்களாகவும், வேலைவாய்ப்புக்கு உகந்தவர்களாகவும், தொழில்முனைவுத்திறன் நிறைந்தவர்களாகவும் உருவாக்குவதே புதிய தேசிய கல்விக் கொள்கையின் தலையாய நோக்கம்.

புதிய கல்விக் கொள்கை

தமிழக அரசு புதிய கல்விக் கொள்கைக்கு நேரடியாக எதிர்ப்புத் தெரிவித்தாலும், அதில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளை வெவ்வேறு பெயர்களில் மறைமுகமாக செயல்படுத்தி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

மாநிலத்துக்கென தனி கல்விக் கொள்கை உருவாக்கும் திட்டம் உண்மையிலேயே நல்ல விஷயம்தான். ஆனால், அது தேசிய கல்விக் கொள்கைக்கு இணக்கமானதாக இருக்க வேண்டும். புதிய கல்விக் கொள்கை தமிழக நலன்களுக்கு எதிராக உருவாக்கப்படவில்லை.

யுஜிசி, ஏஐசிடிஇ உள்ளிட்ட தேசிய ஒழுங்குமுறை அமைப்புகள் உருவாக்கியுள்ள வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய, மாநில பல்கலைக்கழகங்கள் பின்பற்ற வேண்டியது கட்டாயமாகும்.

புதிய தேசிய கல்விக் கொள்கை பாராளுமன்ற ஒப்புதல் பெற்றிருப்பதால், அதை படிப்படியாக நடைமுறைப்படுத்த தேசியஒழுங்கு முறை அமைப்புகள் ஏற்கெனவே வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளன. தமிழகஅரசு அவற்றைப் பின்பற்றாவிட்டால், நமது மாணவர்கள் தேசிய கல்வித் திட்டங்களில் இருந்து தனிமைப்படுத்தப்படலாம். அங்கீகாரம் மற்றும் தேசிய அளவில்வேலைவாய்ப்பு பெறுவதில் பிரச்சினைகளை எதிர்கொள்ளக்கூடுமோ என்ற அச்சமும் எனக்கு ஏற்படுகிறது. இவ்வாறு பாலகுருசாமி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x