Published : 14 Mar 2022 08:37 AM
Last Updated : 14 Mar 2022 08:37 AM

வேளாண் நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளின் கோரிக்கைகள் முழுமையடையும்: வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உறுதி

வேளாண் நிதி அறிக்கை தயாரிப்பு தொடர்பாக தஞ்சாவூரில் நேற்று நடந்த விவசாயிகள் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம். உடன், அமைச்சர் அன்பில் மகேஸ் உள்ளிட்டோர்.

தஞ்சாவூர்: விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் முழுமையடையும் விதமாக தமிழக அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை அமையும் என வேளாண்மை-உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

2022-23-க்கான வேளாண் தனி நிதிநிலை அறிக்கை தயாரிப்பது தொடர்பாக தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்துக்கு, ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார். அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழக அரசின் தலைமைக் கொறடா கோவி.செழியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்த மானியம் வழங்க வேண்டும். இதைக் கண்காணிக்க குழு அமைக்க வேண்டும். பாரம்பரிய நெல், சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க தனித் துறை வேண்டும். டெல்டாவில் வேளாண்மை பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும்.

டெல்டாவில் வேளாண் சார்ந்த தொழில்களைக் கொண்டு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். பிற மாநிலங்களைப் போல பயிர்க் காப்பீடு திட்டத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என விவசாயிகள் கோரினர்.

தொடர்ந்து, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியது: இயற்கை விவசாயத்தில் விவசாயிகளுக்கு ஆர்வம் ஏற்பட்டு வருவதால், 3 ஆண்டுகளில் வேளாண் புரட்சி உருவாக வாய்ப்புள்ளது.

கடந்த ஆண்டு கருவாக இருந்த வேளாண் நிதி நிலை அறிக்கை, தற்போது 6 மாத குழந்தையாக வளர்ந்துள்ளது. இதன் மூலம் 128 அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழகத்தில் ரசாயன உர பயன்பாட்டால் மலட்டுத்தன்மை அடைந்துவிட்ட மண்ணை வளப்படுத்த தனியாக திட்டம் கொண்டுவரப்படும். இதற்காக, இயற்கை விவசாயம், தேனீ வளர்ப்பை ஊக்குவிக்க உள்ளோம் என்றார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: நெல் சாகுபடிக்கு இணையாக சிறுதானிய உற்பத்தியை முனைப்பாக கொண்டு செல்லும் வகையில், வரும் ஆண்டு சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட உள்ளது. வேளாண் நிதிநிலை அறிக்கையில் இயற்கை விவசாயத்துக்கான பல்வேறு திட்டங்களும் இருக்கும். தமிழகத்தில் 15 மாவட்டங்களில் விவசாயிகளின் கருத்துகளை காணொலி மூலம் தொடர்புகொண்டு கேட்டுள்ளோம். விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் முழுமை அடையும் விதமாக இந்த வேளாண் நிதிநிலை அறிக்கை அமையும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x