பலமுனை தாக்குதல்களால் பரிதவிப்பு: விவசாயிகளை கசக்கி பிழியும் நெல் கொள்முதல் நிலையங்கள்

விருத்தாசலம் அருகே இருப்பு கிராமத்தில் இயங்கும் நேரடி கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள்.
விருத்தாசலம் அருகே இருப்பு கிராமத்தில் இயங்கும் நேரடி கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள்.
Updated on
2 min read

விருத்தாசலம்: உழைத்து அறுவடை செய்த நெல்லை, விற்பனை செய்யும் விவசாயிகளை கொள்முதல் நிலையம் அமைந்துள்ள ஊராட்சியின் தலைவர் முதல் கொள்முதல் நிலைய மூட்டைகளை ஏற்றிச் செல்லும் லாரி ஓட்டுநர் வரை கசக்கி பிழிவதாக விவசாயிகள் குமுறுகின்றனர்.

சம்பா சாகுபடியை ஒட்டி தமிழ்நாட்டில் சுமார் 2,350 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்கி வருகின்றன. குறைந்தபட்ச ஆதரவு விலையில், விவசாயிகளிடம் இருந்து அரசாங்கமே நேரடி நெல் கொள்முதல் செய்யும் வகையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் இக்கொள் முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ள விலையுடன் தமிழ்நாடு அரசு ஊக்கத் தொகை வழங்கி விவசாயிகளிடம் இருந்து இங்கு நெல்லை கொள்முதல் செய்கிறது. அந்த வகையில், 17 சதவீதத்துக்கு மிகாமல் ஈரப்பதம் உள்ள சன்ன ரக நெல், தமிழக அரசு வழங்கும் ஊக்கத்தொகை ரூ.100 உடன் ரூ.2,060 விலையில் ஒரு குவிண்டால் (100 கிலோ) வாங்கப்படுகிறது. பொது ரக நெல்லை, தமிழக அரசு வழங்கும் ஊக்கத்தொகை ரூ.75-உடன் குவிண்டால் ரூ.2,015 விலையில் வாங்கப்படுகிறது.

வெளிச்சந்தை விலையை விட அரசு அறிவித்துள்ள விலை ஆதாயமாக இருப்பதால் விவசாயிகள் நேரடி கொள்முதல் நிலையங்களிலேயே விற்க விரும்புகின்றனர்.

“இந்த கொள்முதலில் எந்த தவறும் நடக்கக் கூடாது என்பதில் அரசு கவனமாகவும் உறுதியாகவும் உள்ளது. கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் ஒரு பைசா வாங்கினாலும் அரசு பொறுத்துக் கொள்ளாது. மீறி தவறு செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உணவுத்துறை அமைச்சர் ஆர். சக்கரபாணி அண்மையில் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

“ஆனாலும், கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ.55 முதல் 60 வரை கட்டாய வசூல் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது” என்கிறார் தென்னிந்திய நதிகள் பாதுகாப்பு சங்கத்தின் கடலூர் மாவட்டத் தலைவர் சக்திவேல்.

கடலூர் மாவட்டத்தில் 181 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்கி வரும் நிலையில், கொள்முதல் நிலையங்களில் குறைந்தபட்சம் 20 முதல் 25 நாட்களுக்கு மூட்டைகள் எடைபோடப்படாமல் வைக்கப்படுகின்றன. கொண்டு வந்த நெல் மூட்டைகளை வைத்துக் கொண்டு விவசாயிகள் இரவு பகலாக காவல் காக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தாழநல்லூர் என்ற ஊராட்சியில் இயங்கி வரும் கொள்முதல் நிலையத்தில் காத்திருப்பில் இருந்த விவசாயிகளிடம் பேசினோம். “மூட்டைக்கு ரூ.50 வாங்கினர், தற்போது ரூ. 55 என உயர்த்தி விட்டனர். ‘ஏன்?’ என்று கேட்டால் மூட்டையில் அள்ளி போடுபவருக்கு 5 ரூபாய் தர வேண்டும் என்கின்றனர்” என்று வருத்தமாய் கூறுகின்றனர்.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருக்கும் பட்டியல் எழுத்தர்களிடம் இதுபற்றி விசாரித்தோம்.

“நாங்கள் யாரிடமும் பணம் கேட்பதில்லை. பஞ்சாயத்து தலைவர்கள், முக்கியஸ்தர்களின் பங்குக்காக இத்தொகை வசூலிக்கப்படுகிறது. மூட்டைக்கு எவ்வளவு கூடுதலாக வைத்து வசூலிக்க வேண்டும் என்பதை அவர்கள் தான் முடிவு செய்கின்றனர். ‘ஊர் கோயில் செலவு’ என ஒரு தொகை, கொள்முதல் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள ஒரு தொகை என நிர்ணயிக்கின்றனர்.

இதுபோக எடை போடுபவர்கள் ஒரு புறம் பணம் கேட்கின்றனர். லாரி ஓட்டுநர்கள் மறுபுறம், ‘மூட்டைக்கு ரூ.8 முதல் 10 வரை கொடுத்தால் தான் வண்டியில் லோடு ஏற்றுவோம்’ என கறார் காட்டுகின்றனர். வேறுவழியின்றி இவையனைத்தும் விவசாயிகள் தலையில் விழுகிறது. இவர்கள் செய்யும் தவறுக்கு நாங்கள் பலிகடா ஆகிறோம்” என்கின்றனர் வேதனையோடு.

மூட்டைகளை ஏற்றும் சுமைதூக்குவோரிடம் பேசியபோது, “ஊர் தலைவர், எதிர்க்கட்சி, நாங்கள், லாரி ஓட்டுநர் மற்றும் அதிகாரிகள் என பலருக்கு பங்கு கொடுக்கனும். இல்லையென்றால் கொள்முதல் நிலையமே இயங்காது” என்கின்றனர்.

ஒப்பந்த அடிப்படையில் லாரிகளை வாடைகைக்கு விடும் விகேடி ஆனந்த் என்பவரிடம் விசாரித்தபோது, “கூடுதலாக ஒரு பைசா கூட வாங்கக் கூடாதுன்னு தான் சொல்லியிருக்கோம். வாங்கினார்கள் என்றால் புகார் கொடுக்கச் சொல்லுங்கள்” என்றார்.

இதுகுறித்து கடலூர் மண்டல நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளர் சிற்றரசுவிடம் கேட்டபோது, “எந்த நிலையத்திலும் அரசு நிர்ணயித்த கொள்முதல் விலையை விடை கூடுதலாக வாங்கக் கூடாது. கொள்முதல் செய்த நெல்லை ஏற்றிச்செல்ல டோக்கன் வழங்கப்பட்டு வாடகையை நாங்களே வழங்கி வருகிறோம். அதற்கென தனியாக வசூலித்தால் லாரி உரிமம் ரத்து செய்யப்படும்.

எடைபோடும் பணியாளர்களுக்கான ஊதியமும் தற்போது மூட்டைக்கு ரூ. 3.25-லிருந்து 10 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் யாரும், யாருக்கும் பணம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை.

நடப்பு பருவத்தில் இதுவரை 80 சதவீத நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இன்னும் 17 ஆயிரம் டன் மட்டுமே உள்ளது. அவை இன்னும் 4 தினங்களில் கொள்முதல் செய்யப்படும்” என்றார்.

“அமைச்சரின் எச்சரிக்கை உத்தரவை அமல்படுத்த வேண்டிய அதிகாரிகள் செவிமடுக்காமல் இருக்கும் வரை, இந்த எச்சரிக்கையால் எந்தப் பயனும் இல்லை” என்கிறார் வீராணம் ராதா வாய்க்கால் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் ரங்கநாயகி.

யாரிடம் புகார் தெரிவிப்பது?

நேரடி கொள்முதல் நிலையத்தில் நெல் விற்பனை தொடர்பாக விவசாயிகள் ஆலோசனை பெறவும் அங்கு நடக்கும் முறைகேடுகள் குறித்தும் புகார் தெரிவிக்க தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் கழக, தலைமை அலுவலகக் கட்டுப்பாட்டு அறையை 94451 90660 மற்றும் 94451 95840 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும், இந்த எண்கள் இயங்கவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in