

கோவை மார்க்கெட்டில் சமையலுக்கான எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.
இதுகுறித்து கோவை ரங்கே கவுடர் வீதி சமையல் எண்ணெய் வியாபாரிகள் கூறியதாவது:
இந்தியாவுக்கு பெருமளவு சூரியகாந்தி சமையல் எண்ணெய் உக்ரைன் மற்றும் ரஷ்யாவிலிருந்து வருகிறது. தற்போது இரு நாடுகளுக்கும் இடையில் நடைபெறும் போரால் விநியோகத்தில் இடர்பாடுகள் ஏற்பட்டு, விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தட்டுப்பாடு ஏற்பட்டு சூரியகாந்தி சமையல் எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. கடந்த இரு வாரங்களுக்கு முன்பு லிட்டர் ரூ.150-க்கு விற்பனை செய்யப்பட்ட சூரியகாந்தி எண்ணெய் தற்போது ரூ.190-ஆக உயர்ந்துள்ளது.
இதேபோல் பாமாயில் விலையும் அதிகரித்துள்ளது. பாமாயில் முதல் தரம் லிட்டர் ரூ.130-க்கு இரு வாரங்களுக்கு முன் விற்பனை செய்யப்பட்டது. தற்போது ரூ.170-ஆக அதிகரித்துள்ளது. இந்தோனேஷியா மற்றும் மலேசியா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அதிகளவில் பாமாயில் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தோனேஷியாவில் கொண்டு வரப்பட்டுள்ள சில ஏற்றுமதி கட்டுப்பாடுகள் காரணமாக இத்தகைய விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. மேலும், கொப்பரை தேங்காய் விலை கிலோவுக்கு ரூ.5 கூடியுள்ளதால் தேங்காய் எண்ணெய் விலையும் சற்றே அதிகரித்துள்ளது. சூரியகாந்தி எண்ணெய், பாமாயில் விலை அதிகரிப்பால் கடலை எண்ணெய் விற்பனை அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.