

பெண் பயணிகளின் கோரிக்கை ஏற்று மங்களூர் விரைவு ரயிலில் பெண்களுக்கான பிரத்யேக பெட்டி மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல்-மங்களூர் விரைவு ரயிலில் (வண்டி எண்.12685/86) விரைவு ரயிலில் பெண்களுக்கான பெட்டி இருந்தது. இந்நிலையில், இந்த ரயிலின் பெட்டிகள் நவீன ரக தீப்பிடிக்காத பெட்டிகளாக மாற்றப்பட்டது. இதன் காரணமாக பெண்கள் பெட்டி நீக்கப்பட்டது.
இந்நிலையில், பெண் பயணிகள் இந்த ரயிலில் தங்களுக்கு தனியாக பெட்டி ஒதுக்க வேண்டும் என விடுத்த கோரிக்கையை ஏற்று மீண்டும் அந்த ரயிலில் பெண்களுக்கான தனிப்பெட்டி இணைக்க ரயில்வே நிர்வாக ம் உத்தரவிட்டுள்ளது.
சிறப்பு ரயில்
பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக சென்னை சென்ட்ரல்-ஹவுரா இடையே சிறப்பு குளிர்சாதன வசதி கொண்ட விரைவு ரயில் (வண்டி எண்.00842) வரும் 10-ம் தேதி இயக்கப்படுகிறது. இந்த ரயில் சென்ட்ரலில் இருந்து மாலை 5.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மாலை 6.30 மணிக்கு ஹவுரா சென்றடையும்.
இதேபோல், திருநெல்வேலி-காந்திதம் இடையே சிறப்பு ரயில் (09457) வரும் 14, 21-ம் தேதிகளில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் திருநெல்வேலி யில் இருந்து வியாழக்கிழமை காலை 7.55 மணிக்கு புறப்பட்டு சனிக்கிழமை காலை 4.50 மணிக்கு காந்திதம் சென்றடையும். இவ்வாறு தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.