எல்இடி பல்பு விவகாரத்தில் ஊழலா?- கருணாநிதிக்கு அமைச்சர்கள் விளக்கம்

எல்இடி பல்பு விவகாரத்தில் ஊழலா?- கருணாநிதிக்கு அமைச்சர்கள் விளக்கம்
Updated on
1 min read

மத்திய அரசின் ‘உதய்’ திட்டம் குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறிய கருத்துகள் மற்றும் எல்இடி பல்புகள் தொடர்பாக கருணாநிதி தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர்கள் நத்தம் ஆர்.விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி விளக்கம் அளித்துள்ளனர்.

தமிழக மின்துறை அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன், நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

''24 மணி நேரம் மின்சாரம் வழங்கவும், நஷ்டத்தைக் குறைக்கவும் ‘உதய்’ திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இத்திட்டம் மூலம் ஒட்டுமொத்த தொழில்நுட்ப மற்றும் வணிக மின் இழப்பு 2018-19ம் ஆண்டுக்குள் 15 சதவீதமாக குறைக்கப்பட வேண்டும் என்று வரையறை இருந்தாலும், அதற்கு தேவையான கட்டமைப்புகளை ஏற்படுத்த மத்திய அரசு ஒரு ரூபாய் வழங்கக்கூட வழிவகை இல்லை. அப்படி ஒரு திட்டத்தால் தமிழகத்துக்கு ஒரு பயனும் இல்லை.

எனவேதான், இந்த வரையறையில் இருந்து 15 ஆண்டுகளுக்கு தளர்வு வழங்க வேண்டும் என்றும், மாநில அரசு எடுத்துக்கொள்ளும் கடன் தொகையில் 25 சதவீதத்தை மத்திய அரசு மானியமாக வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும், 3 மாதங்களுக்கு ஒருமுறை மின்கட்டணங்களை மாற்றி அமைப்பது என்பது எந்த விதத்தில் நியாயம்?

வீட்டு மின் உபயோகிப்பாளர்களுக்கு எல்இடி பல்புகள் விற்கப்படும் ‘உஜாலா’ திட்டத்தையும், தெரு விளக்குகளை எல்இடி பல்புகளாக மாற்றும் திட்டத்தையும் குழப்பிக்கொண்டு, தெளிவில்லாத அறிக்கையை திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டிருக்கிறார். அதில், ‘35 லட்சம் எல்இடி பல்புகள் பொருத்தப்பட்டுள்ளதாக அரசு கணக்கு சொல்கிறது என்றும், ரூ.3 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்திருக்கலாம் என்று வார இதழில் வெளியிடப்பட்ட அவதூறு செய்தியையும் அவர் குறிப்பிட்டுள்ளார். எல்இடி விளக்குகளுக்கான செலவு ரூ.22 கோடிதான். இந்நிலையில், எல்இடி பல்புகளுக்கு மட்டும் ரூ.145 கோடி என்று கூறுவது முற்றிலும் அவதூறான பொய் செய்தி.

அனைத்து உள்ளாட்சிகளிலும் சேர்த்து மொத்தம் 2 லட்சத்து 7 ஆயிரத்து 566 தெருவிளக்குகள் மட்டுமே எல்இடி விளக்குகளாக மாற்றப்பட்டுள்ள நிலையில், 35 லட்சம் எல்இடி பல்புகள் பொருத்தப்பட்டிருப்பதாக கூறுவது கற்பனையாக உள்ளது.

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கடந்த 31-ம் தேதி மதுரையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் தமிழகத்தை சேர்ந்த அமைச்சர் ஒருவர் பெரும் 2ஜி ஊழலை நிகழ்த்தினார். காற்றிலே ஊழல் நிகழ்த்தியவர்கள் திமுகவினர். 2ஜி ஊழலில் ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு என்று மத்திய தணிக்கை துறை தெரிவித்துள்ளது. தற்போதைய மத்திய அரசால் 2ஜி அலைக்கற்றை ஏலம் விடப்பட்டதில் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கோடி பெறப்பட்டது’ என்றெல்லாம் தெரிவித்துள்ளார். இதற்கு பதில் என்ன என்பதை கருணாநிதி தெரிவிக்கட்டும்.''

இவ்வாறு அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in