

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலில் பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக எழும் பிரச்சினைகள் குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
மணமக்களில் ஒருவர் மாற்றுத் திறனாளியாக இருந்தால் கோயில்களில் நடக்கும் திருமணத்துக்கான கட்டணம் வசூலிக்கப்படாது என்று தமிழக அரசு சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தது. இத்திட்டத்தின் அடிப்படையில், சென்னை வடபழனி முருகன் கோயிலில் நேற்று 2 மாற்றுத் திறனாளி மணமக்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு திருமணத்தை நடத்தி வைத்து சான்றிதழை வழங்கினார்,
பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: கடந்த ஆட்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கு கோயிலில்களில் இலவச திருமணம் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தபோது ஏற்கவில்லை. திமுக அரசு பொறுப்பேற்றதும் மாற்றுத் திறனாளிகளுக்கு கோயிலில்களில் இலவச திருமணம் நடத்தும் திட்டம் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாளையொட்டி தொடங்கப்பட்ட 1 லட்சம் தல மரங்கள் நடும் பணி வேகமாக நடந்து வருகிறது. இதுவரை 80 ஆயிரம் மரங்கள் நடப்பட்டுள்ளன. மேலும், 1 லட்சத்துக்கு அதிகமான மரங்கள் நடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் பக்தர்களை அனுமதிப்பதில் அவ்வப்போது பிரச்சினை எழுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர், ‘‘சிதம்பரம் கோயில் குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். இணை ஆணையர் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விசாரணை அறிக்கை பெற்றதும் இந்த பிரச்சினை குறித்துமுதல்வர் மேற்பார்வையில் ஆலோசனை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.