Published : 14 Mar 2022 07:47 AM
Last Updated : 14 Mar 2022 07:47 AM

அடிப்படை வசதி இல்லா நெடுஞ்சாலை உணவகங்கள்: அரசு தலையிட பயணிகள் கோரிக்கை

செங்கல்பட்டு: தமிழக நெடுஞ்சாலைகளில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாத உணவகங்களால் பயணிகள் அவதியடைவதாகவும் அதிக விலைக்கு உணவுகள் விற்கப்படுவதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் நெடுஞ்சாலைகளில் பல உணவகங்கள் செயல்படுகின்றன. குடிநீர் முதல் கழிப்பிடம் வரை பலவித பயன்பாடுகளுக்கு பயணிகள் இந்த உணவகங்களை நாட வேண்டிய அவசியம் இருக்கிறது. பெரும்பாலும் இத்தகைய உணவகங்களில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் விலை அதிகமாக இருப்பதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இது மட்டுமின்றி தரமான குடிநீர், சுகாதாரமான கழிப்பறை இருப்பதில்லை.

சில உணவகங்களில் பார்க்கிங் வசதி கூட சரிவர இல்லை. இதற்கெல்லாம் தீர்வாக, அரசு தலையிட்டு நியாயமான முறையில், தரமான உணவுப் பொருள்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பயணிகளின் வேண்டுகோளாக இருக்கிறது.

இதுகுறித்து பயணிகள் சிலர் கூறியதாவது: உணவகங்கள் தேசிய நெடுஞ்சாலைக்கு மிக அருகில் உள்ளன. பேருந்து நிறுத்த போதிய இடவசதி இல்லை. உணவின் விலையும் அதிகமாகவே உள்ளது. பல உணவகத்தில் வெளிப்புறத்தில் கழிப்பறை வசதி இல்லை. அதனால், பயணிகள் தேசிய நெடுஞ்சாலையின் ஓரம் மலம், சிறுநீர் கழிக்க வேண்டியுள்ளது. இரவு நேரத்தில் போதிய பாதுகாப்பு இல்லாத நிலையுள்ளது.

அதனால், விபத்து ஏற்பட்டு உயிர்ச் சேதம் ஏற்படுகிறது. பல உணவகங்களில் போதிய அடிப்படை வசதி இல்லை. கட்டிடத்துக்கான அனுமதி, காவல் துறையின் தடையில்லா சான்றிதழ், வணிக அனுமதிச் சான்று, உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதிச் சான்றிதழ், இந்திய உணவு பாதுகாப்பு தர ஆணையத்தின் சான்றிதழ் உள்ளிட்டவற்றைப் பெற வேண்டும். ஆனால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இடத்தை பார்வையிட்டு அனுமதி கொடுத்தார்களா? என்பதே தெரியவில்லை என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x