Published : 14 Mar 2022 12:42 PM
Last Updated : 14 Mar 2022 12:42 PM
சென்னை: ஐஐடியில் நடைபெற்ற வருடாந்திர திறந்தவெளி நிகழ்ச்சியில் மாணவர்கள் உருவாக்கிய எலெக்ட்ரிக் ரேஸ் கார் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.
சென்னை ஐஐடியில் ஆண்டுதோறும் வருடாந்திர திறந்தவெளி நிகழ்ச்சி (ஓபன் ஹவுஸ்) என்ற சிறப்பு நிகழ்ச்சி நடந்து வருகிறது. ஐஐடி புதிய கண்டுபிடிப்பு மையம் சார்பில் நடத்தப்படும் இந்நிகழ்ச்சியில் ஐஐடி மாணவர்கள் உருவாக்கும் புதிய சாதனங்கள், புதிய தொழில்நுட்பங்கள், புதிய கண்டுபிடிப்புகள் பொது கண்காட்சிக்கு வைக்கப்படும். கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்நிகழ்ச்சி நேரடியாக நடத்தப்படவில்லை. இணையவழி நிகழ்ச்சியாக மட்டுமே நடத்தப்பட்டது.
இந்நிலையில், 2 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு 13-வது திறந்தவெளி நிகழ்ச்சி ஐஐடி வளாகத்தில் நேற்று நேரடி நிகழ்வாக நடந்தது. இந்நிகழ்ச்சியை ஐஐடி இயக்குநர் வீ.காமகோடி தொடங்கிவைத்தார். இதில், ஐஐடி மாணவர்கள் உருவாக்கிய 60-க்கும் மேற்பட்ட புராஜெக்ட்டுகள் இடம்பெற்றிருந்தன. தானியங்கி வாகனங்கள், ராக்கெட்டுகள், எலெக்ட்ரிக் ரேஸ் கார், பிளாக்செயின் தொழில்நுட்ப திட்டம் பேர்டு டைவர்ட்டர், ஹைபர் லூப் உள்ளிட்டவற்றை மாணவர்கள் காட்சிப்படுத்தினர். ஐஐடி ரப்தார் மாணவர் குழுவினர் உருவாக்கிய எலெக்ட்ரிக் ரேஸ் கார் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
முன்னதாக, ஐஐடி இயக்குநர் காமகோடி பேசும்போது, "புதிய கண்டுபிடிப்புகள் கல்விநிறுவனங்களுக்கு இதயமாக திகழ்கின்றன. இளம் கண்டுபிடிப்பாளர்கள் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தவும், இளம் மாணவர்கள் புதுமைகளை உருவாக்க மிகப்பெரிய ஊக்க சக்தியாகவும் இந்நிகழ்ச்சி விளங்குகிறது" என்றார். ஐஐடி புதிய கண்டுபிடிப்பு மையத்தின் புதிய இணையதளத்தையும் அவர் தொடங்கிவைத்தார். இந்த திறந்தவெளி நிகழ்ச்சியை இணையவழியில் காணவும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT