Published : 14 Mar 2022 08:00 AM
Last Updated : 14 Mar 2022 08:00 AM
தென்காசி: தென்காசி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக வெயிலின் தாக்கம்அதிகரித்து வருகிறது. மார்ச் மாதம்தொடங்கியதில் இருந்து வெப்பத்தின் அளவு மேலும் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.
மதிய நேரத்தில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது. விவசாய தொழிலாளர்களும், கட்டிட தொழிலாளர்களும் வெயில் கொடுமையால் வேலை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.
ஒரு சில இடங்களில் லேசான கோடை மழை பெய்தாலும் வெப்பத்தை தணிக்கும் அளவுக்கு மழைபெய்யாததால் அனல் காற்று வீசுகிறது. வெப்பத்தின் தாக்கத்தை தணிக்க கோடை மழை பெய்யுமா என்ற ஏக்கத்துடன் பொதுமக்கள் உள்ளனர். நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் அணைகளிலும் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
கடனாநதி அணை நீர்மட்டம் 40.20 அடியாகவும், ராமநதி அணைநீர்மட்டம் 25 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 52.82 அடியாகவும், குண்டாறு அணை நீர்மட்டம் 19.37 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 27 அடியாகவும் இருந்தது. அணைகளில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்குள் நீண்டகாலமாக தூர்வாரப்படாத அணைகளை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
தென்காசி மாவட்டத்தின் சுற்றுலாத் தலமான குற்றாலம் அருவிகளில் குறைவான அளவில் தண்ணீர் விழுந்தது. குற்றாலம் புலியருவி நீரின்றி ஏற்கெனவே வறண்டுவிட்ட நிலையில் சிற்றருவி, பிரதான அருவியும் நீரின்றி வறண்டு காணப்படுகிறது. ஐந்தருவியில் 2 கிளையில் மட்டும் பாறையை ஒட்டியபடி சிறிதளவு நீர் வந்தது. அருவியில் குளிக்க ஆவலுடன் வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT