Published : 14 Mar 2022 05:11 AM
Last Updated : 14 Mar 2022 05:11 AM

ரூ.435 கோடி வரி பாக்கியால் நிதி நெருக்கடியில் தவிக்கும் மதுரை மாநகராட்சி: மேயர் இந்திராணி எதிர்கொள்ளும் சவால்கள்

ரூ.435 கோடி வரி பாக்கி இருப்பதால் மதுரை மாநகராட்சி கடும் நிதி நெருக்கடியில் தவிக்கிறது. மேலும் மோசமான சாலைகள், போக்குவரத்து நெரிசல், குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவது உட்பட பல்வேறு பிரச்சினைகள் புதிய மேயருக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளன.

மதுரை மாநகராட்சியின் 8-வது மேயராக திமுகவைச் சேர்ந்த இந்திராணி நேற்று முன்தினம் பொறுப்பேற்றார். குடும்பத் தலைவியாக இருந்த அவர் தற்போதுதான் முதல் முதலாக அரசியலில் நுழைந்துள்ளார்.

மதுரையில் பெரிய தொழிற் பேட்டைகள் இல்லை. ஆன்மிகச் சுற்றுலாவையும், மருத்துவச் சுற்றுலாவையும் சார்ந்த தொழில் கள் மட்டுமே மதுரையின் வர்த்த கம், வேலைவாய்ப்புகளாக உள் ளன. நகரில் புழுதி பறக்கும் குண்டும், குழியுமான சாலைகள் அதிகமாக உள்ளன. மழை பெய்தால் தண்ணீர் வெளியேற வழியின்றி சாலைகள் தெப்பமாக மாறிவிடும். வாகனங்கள் நிறுத் தம் இல்லாததால் நகரில் போக்கு வரத்து நெரிசல் தீராத பிரச்சினை யாக உள்ளது. தேவை யான இடங்களில் பாலங்கள் அமைக் காதது போன்றவை மதுரையின் தீராத பிரச்சினைகளாக உள்ளன.

இதனால் கடந்த 10 ஆண்டுகளாக மதுரைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்துள்ளது. நகரின் வளர்ச்சி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.

நூறு வார்டுகளிலும் குடிநீர் பற்றாக்குறை, பாதாளச் சாக்கடை குழாய்கள் உடைந்து குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவது, குப்பைகள் தேங்கிக் கிடப்பது, மழை நீர் கால்வாய் புதர்கள் மண்டி மழைக் காலங்களில் நகரின் அனைத்து சாலைகளிலும் தண்ணீர் தேங்கி போக்குவரத்து துண்டிக்கப்படுவது ஆகிய பிரச்சினைகளால் மதுரை மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர்.

மதுரை கல்லூரி மேம்பாலம், ஆண்டாள்புரம் மேம்பாலம் போன்ற சிதிலமடைந்த மேம்பாலங்களைப் பராமரிக்காமல் புதிய பாலங்கள் திட்டமிடப்படாமல் கட்டப்பட்டுள்ளது. கோரிப்பாளையம், சிம்மக்கல் பகுதியில் மேம்பாலம் கட்டுவதாக அறிவித்து தற்போது வரை கட்டாததால் அப்பகுதியில் நிரந்தரமாகவே போக்குவரத்து நாள் முழுவதும் ஸ்தம்பிக்கிறது.

அதிமுக ஆட்சியில் மக்களவைத் தேர்தல், ஊரக உள்ளாட்சித் தேர்தல், சட்டப் பேரவைத் தேர்தல் நேரங்களில் பொதுமக்களுக்கு நெருக்கடி கொடுத்தால் வாக்கு வங்கி குறையும் எனக் கருதி வரி வசூலை மதுரை மாநகராட்சி விரைவுபடுத்தவில்லை. அதனால் சொத்து வரி, குடிநீர் வரி, இதர வருவாய் இனங்களுக்கான வாடகை உள்ளிட்டவை மிகப் பெரிய அளவில் வசூலாகாமல் உள்ளன. தற்போது ரூ.435 கோடியே 60 லட்சம் வரி பாக்கி உள்ளது. அதனால், மாநகராட்சி மிகப் பெரிய நிதி நெருக்கடியில் தவிக்கிறது. இதனால் அன்றாட வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. எனவே வரி வசூலை முடுக்கிவிட்டு நிதி ஆதாரம் உள்ள மாநகராட்சியாக மாற்றுவது மிகப் பெரிய சவாலாக உள்ளது.

மாநகராட்சியில் இது போன்ற நிர்வாகப் பிரச்சினைகளையும், பொதுமக்களுக்கான அடிப்படைப் பிரச்சினைகளையும் தீர்ப்பது மேயர் இந்திராணிக்கு சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x