

காங்கிரஸை மையமாக வைத்து அணி அமைத்தால்தான் பாஜகவை தோற்கடிக்க முடியும் என சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
காரைக்குடி, தேவகோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
அந்தந்த மாநில அரசியல் இலக்கணத்தின்படி, 5 மாநில தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. இதே முடிவு 2024 மக்களவைத் தேர்தலிலும் தொடரும் எனச் சொல்ல முடியாது. அதற்கு இன்னும் 26 மாதங்கள் உள்ளன. அதற்குள் பல மாற்றங்கள் ஏற்படலாம்.
2024-ம் ஆண்டு இதேபோல் முடிவுகள் இருக்காது என அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் சொன்ன கருத்தை ஏற்கிறேன். ஒவ்வொரு தேர்தல் முடிவும் பல பாடங்களை கற்றுக் கொடுக்கிறது. இந்த தேர்தல் முடிவுகள் பாஜகவை எதிர்க்கும் கட்சிகள் ஒன்று சேர வேண்டும் என்பதை தெளிவாக கற்றுக் கொடுத்துள்ளது. பாஜகவை எதிர்ப்பவர்கள் பிரிந்து நிற்பதால் தான் அக்கட்சியினர் வெற்றி பெறுகின்றனர்.
காங்கிரஸை மையமாக வைத்து பாஜகவுக்கு எதிரான அணியை அமைத்தால், அவர்களை தோற்கடிக்க முடியும். பாஜக, காங்கிரஸுக்கு இருக்கும் முக்கிய வேறுபாடு, அக்கட்சிக்கு அரசியலுக்கு அப்பாற்றபட்ட ஆர்எஸ்எஸ் போன்ற பல சமுதாய அமைப்புகள் ஆதரவாக உள்ளன.
அந்த அமைப்புகள் தேர்தல் சமயத்தில் மட்டும் பிரச்சாரம் செய்வதில்லை. தேர்தல் இல்லாத நேரத்திலும் இந்துத்துவா கொள்கைகளை முன்னிருத்தி மக்களிடம் தொடர்ந்து பிரச்சாரம் செய்கின்றன. காங்கிரஸுக்கு துணை அமைப்புகள் கிடையாது. தேர்தல் இல்லாத நேரத்தில் மக்களை அணுகக் கூடிய வாய்ப்பும் இல்லை. அதனால் பாஜக வெற்றி பெறுகிறது.
காங்கிரஸ் அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். அதற்காக தலைமையை மட்டும் வைத்து விவாதம் நடத்துவது தேவையில்லாதது. மற்ற மாநிலங்களில் பாஜகவுக்கு செல்வாக்கு உள்ளது. ஆனால், தமிழகத்தில் பாஜக ஏற்கப்படாத கட்சி. ஒரே நாடு, ஒரே தேர்தலை நடத்த முடியாது. அதற்கு சாத்தியமே கிடையாது. அடிக்கடி தேர்தல் வருவதால் தான் மக்களின் கோபம், நிலைப்பாட்டை கட்சிகள் தெரிந்து கொள்ள முடியும்.
உக்ரைனில் கல்வி பயின்று பாதிக்கப்பட்ட மாணவர்களை, இந்தியா நல்ல ராஜாங்க உறுவுகளை வைத்துள்ள வேறு நாடுகளில் படிக்க வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சில செலவுகளை அரசே ஏற்கலாம். மேலும் மாணவர்களின் கல்விக் கடனை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.