

தபால் வாக்குகளை தவறாகப் பயன்படுத்தும் நோக்கில் சென்னை மாநகர காவல்துறையினருக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ள உளவுப்பிரிவு துணை ஆணையர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரியை பாமக கேட்டுக் கொண்டுள்ளது.
இதுகுறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சந்தித்து பாமக செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் கே.பாலு நேற்று வழங்கிய புகார் மனு விவரம்:
அரசு ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்பட வேண்டும் என்றும் ஆளும் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் உயர் அதிகாரிகளால் அறிவுறுத்தப்படுகிறது.
சென்னை மாநகர காவல்துறை உளவுப்பிரிவு துணை ஆணையர் சென்னை மாநகர காவல்துறை யினருக்கு கடந்த மாதம் 22-ம் தேதியிட்ட சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், அரசு ஊழியர்கள் வாக்களிக்கும் தபால் ஓட்டு விண்ணப்ப படிவம் 12-யை அனைத்து காவல்துறையினரிடம் இருந்து சேகரிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் அனைத்து தபால் ஓட்டுகளையும் படிவம் 12-யை ஒரேநபர் பூர்த்தி செய்து தாங்கள் விரும்புவர்களுக்கு வாக்களித்து அதனை தேர்தல் அதிகாரியிடம் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது அப்பட்டமான தேர்தல் விதிமீறலாகும். காவல்துறை உளவுப்பிரிவு அதிகாரிகளை இதற்கு பயன்படுத்திக் கொள்ளவும் திட்டமிடப்பட்டிருக்கிறது. தேர்தல் விதிகளை மீறி சுற்றறிக்கை அனுப்பி ஆளும் கட்சிக்கு ஆதரவாகச் செயல்படும் சென்னை மாநகர காவல்துறை உளவுப்பிரிவு துணை ஆணையர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, அவரை அப்பணியில் இருந்து விடுவிப்பதுடன், அவர்மீது துறைரீதியாக ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்க வேண்டும். இதுபோல தேர்தல் விதிமீறல்களில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், அரசு அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.