

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், முன்னாள் மாணவர்கள் சார்பில் தொழிற்கல்வி நுழைவுத் தேர்வுகள் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்களைக் கொண்ட சிறப்பு நூலகம் நேற்று திறக்கப்பட்டது.
கந்தர்வக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியை மேம்படுத்துவது குறித்து அப்பள்ளியில் 1996-ல் பிளஸ் 2 முடித்த முன்னாள் மாணவர்கள் சமூக வலைதளம் மூலம் ஒன்றிணைந்து ஆலோசித்தனர்.
அதில், பிளஸ் 2 முடித்த பிறகு நீட், ஜேஇஇ போன்ற தொழில் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள் மற்றும் டிஎன்பிஎஸ்சி, ஆர்ஆர்பி, சீருடைப்பணியாளர் போன்ற போட்டித் தேர்வுகளில் எளிதில் மாணவர்களை வெற்றி பெறச்செய்வதற்கான தரமான புத்தகங்களுடன் சிறப்பு நூலகம் ஏற்படுத்துவது என முடிவெடுக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, பள்ளித் தலைமை ஆசிரியர் வெ.பழனிவேல் ஒத்துழைப்புடன் பள்ளி வளாகத்தில் காலியாக இருந்த ஒரு கட்டிடம் மராமத்து செய்யப்பட்டது. மேலும், அங்கு புத்தகங்கள் அடுக்குவதற்காக அலமாரிகள் அமைத்து, தேவையான நாற்காலிகள், மேஜை கள் அமைக்கப்பட்டதுடன், மின் விசிறிகள், மின் விளக்குகளும் பொருத்தப்பட்டு ரூ.3.5 லட்சத்தில் நூலகத்தில் முதற்கட்டமாக ஒரே நேரத்தில் 25 பேர் வாசிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதுதவிர, கணினி மூலம் மின் நூல்களை, இணையதளம் வாயிலாக தேடிப்படிக்கும் வசதியும் அடுத்தகட்டமாக ஏற்படுத்தப்பட உள்ளது.
இந்நிலையில், பள்ளியில் நேற்று நடைபெற்ற நூலகத் திறப்பு விழாவில் முன்னாள் மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். பின்னர், நூலக ஆசிரியர் ஆ.மணிகண்டனிடம் நூலகம் ஒப்படைக்கப்பட்டது.
முன்னாள் மாணவ, மாணவிகள் சுதா, பிரசாத், இளங்கோ, துரை பாண்டியன், தண்டாயுதபாணி, குமரேசன், வெங்கட், செந்தில், மாலதி, சார்லஸ் ஆகியோர் சக மாணவர்களை ஒருங்கிணைத்தனர்.