Published : 24 Apr 2016 02:34 PM
Last Updated : 24 Apr 2016 02:34 PM

மருத்துவ செலவுக்கான பணத்தை பறக்கும் படை பறிமுதல் செய்ததா?- தருமபுரியில் பரபரப்பு புகார்

பாப்பிரெட்டிப்பட்டி அருகே இதய நோயாளி அறுவை சிகிச்சைக்கு வைத்திருந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக புகார் எழுந்துள்ளது.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பையர்நத்தம் பகுதியில் நேற்று மாலை துணை வட்டாட்சியர் சவுகத் அலி தலைமையிலான பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அங்கே நின்றிருந்த மோளையானூரைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் குமார் (42) என்பவரிடம் சோதனையிட்டதில் ரூ.1 லட்சம் பணம் இருந்துள்ளது.

அதற்கு ஆவணங்கள் இல்லை என்பதால் அதை அதிகாரிகள் குழுவினர் பறிமுதல் செய்து பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் குப்புசாமி வசம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாகத் தான் தற்போது சர்ச்சை எழுந்துள்ளது.

இதுபற்றி பாப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த திமுக-வின் தலைமைக் கழக பேச்சாளர் ராசு தமிழ்செல்வன் கூறியது:

மோளையானூரைச் சேர்ந்த குமார் இதய நோயால் பாதிக்கப்பட்டவர். பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதய அறுவை சிகிச்சை செய்ய ரூ.2 லட்சம் பணத்துடன் வருமாறு மருத்துவமனை நிர்வாகம் சமீபத்தில் தெரிவித்துள்ளது. இதையடுத்து நேற்று மாலை பையர்நத்தம் பகுதியில் உள்ள மருத்துவர் ஒருவரிடம் தனது உடல் பிரச்சினை குறித்து ஆலோசனை கேட்க மருத்துவ ஆணவங்களுடன் சென்றுள்ளார்.

பின்னர் அப்பகுதியில் உள்ள உறவினரிடம் அவர் ரூ.1 லட்சம் பணம் பெற்றுக் கொண்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது நான் உட்பட திமுக-வைச் சேர்ந்த சிலர் அப்பகுதியில் தேர்தல் பணி தொடர்பாக நின்று பேசிக் கொண்டிருந்தோம். எங்களை பார்த்த குமார் எங்களிடம் நின்று பேசினார். அப்போது அங்கே வந்த பறக்கும் படையினர் எங்கள் வாகனங்களை சோதனையிட்டனர்.

பின்னர் ஆட்களை சோதனையிட்டபோது குமாரிடம் ரூ.1 லட்சம் பணம் இருந்தது. அது மருத்துவ செலவுக்காக வாங்கி வந்த பணம் என விளக்கம் கூறி, மருத்துவ ஆவணங்களை காட்டியபோதும் அதிகாரிகள் கறாராக பணத்தை பறிமுதல் செய்து சென்றனர். வட்டாட்சியர் அலுவலகம் சென்று முறையிட்ட போதும், ஆவணங்கள் சமர்ப்பித்து ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளுமாறு கூறி விட்டனர்.

தேர்தல் விதிகளை காரணம் காட்டி அதிகாரிகள் நோயாளிக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளனர். 3 பெண் குழந்தைகளுக்கு தந்தையான அவருக்கு ஏதேனும் விபரீதம் நேர்ந்தால் அதற்கு அதிகாரிகள் தான் பொறுப்பு. இவ்வாறு கூறினார்.

இந்த குற்றச்சாட்டு பற்றி அறிய பறக்கும் படை தலைவரும், துணை வட்டாட்சியருமான சவுகத் அலியிடம் கேட்டபோது, ‘நாங்கள் சோதனையிட்டபோது குமாரிடம் பணம் மட்டுமே இருந்தது. மருத்துவ ஆவணங்கள் எதுவும் இல்லை. எனவே பணத்தை பறிமுதல் செய்து பாப்பிரெட்டிப்பட்டி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் நாங்கள் ஒப்படைத்தோம். அதன் பிறகு நடந்தது பற்றி எனக்குத் தெரியாது’ என்றார்.

தேர்தல் நடத்தும் அலுவலர் குப்புசாமியை தொடர்புகொண்டபோது, ‘இது தொடர்பாக பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியரிடம் தான் கேட்க வேண்டும்’ என்று மட்டும் கூறினார்.

தெளிவான வழிகாட்டுதல் வேண்டும்

இந்நிலையில் இதுபற்றி சமூக ஆர்வலர்கள் சிலர் கூறும்போது, ‘அதிகாரிகள் தேர்தல் விதிகளை முழுமையாக அமல்படுத்துவதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

அதேநேரம், உடல்நிலை பாதிப்பில் உள்ள ஒருவர் சிகிச்சைக்காக வைத்திருந்த பணம் என்று கூறும்போது, இந்த விவகாரத்தில் கூடுதல் அக்கறையுடன் செயல்பட்டு அதிகாரிகள் உண்மை நிலையை அறிந்து பணத்தை பறிமுதல் செய்வதை தவிர்த்திருக்கலாம். இதுபோன்ற நேரங்களில் செயல்படும் விதம் குறித்து மாவட்ட நிர்வாகம் அதிகாரிகளுக்கு தெளிவான வழிகாட்டுதல் வழங்கியிருக்க வேண்டும். மேலும், இப்படியான நடவடிக்கைகள் தேர்தல் ஆணையத்தின் மீது மக்கள் மனதில் எதிர்மறை எண்ணங்களை ஏற்படுத்தி விடும்’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x