Last Updated : 13 Mar, 2022 02:45 PM

 

Published : 13 Mar 2022 02:45 PM
Last Updated : 13 Mar 2022 02:45 PM

ஆளுநர்கள் சரியாக நடந்து கொள்வதுகூட தவறாக முன்னிறுத்தப்படுகிறது: ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வேதனை

தெலங்கானா, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் | கோப்புப் படம்.

கோவை: ஆளுநர்கள் சரியாக நடந்து கொள்வதுகூட சில நேரங்களில் தவறாக முன்னிறுத்தப்படுவதாக தெலங்கானா, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வேதனை தெரிவித்தார்.

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தெலங்கானா, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் விமானம் மூலம் இன்று (மார்ச் 13) கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "கரோனா இல்லாத நாடாக இன்று இந்தியா உள்ளது. சுமார் 180 கோடி தடுப்பூசி போட்டுள்ளதுதான் அதற்குக் காரணம். இது சாதாரண சவால் கிடையாது. 100 நாடுகளுக்கு மேல், நமது தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய வெற்றி. இனி வரும் காலங்களிலும் தொடர்ச்சியாக அனைவரும் முகக்கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும்.

தெலங்கானாவில் ஆளுநர் உரையில்லாமல் சட்டப்பேரவை தொடங்கியிருக்கிறது. சட்டப்பேரவை என்றாலே பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன்தான் தொடங்கும். அதை அவ்வாறு தொடங்கவில்லை. சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்க நான்தான் அனுமதி அளிக்க வேண்டும். மக்களுக்கும், அரசுக்கும் இடையில் நிற்க நான் விரும்பவில்லை என்பதால் நான் அதை பெருந்தன்மையோடு பெரிதுபடுத்தவில்லை. என்னைப்பொருத்தவரை ஆளுநர்களும், முதல்வர்களும் மக்களுக்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டு. ஆனால், ஆளுநர்கள் சரியாக நடந்து கொள்வதுகூட சில நேரங்களில் தவறாக முன்னிறுத்தப்படுகிறது.

மத்தியில் ஆளும் கட்சி இல்லாத, எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் சிறு சிறு விஷயங்கள்கூட பெரிதாக முன்னிறுத்தப்படுகிறது. என்னை பொருத்தவரை அனைத்து ஆளுநர்களும், மக்களுக்காக நல்ல திட்டங்களை கொண்டுவர வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடுதான் செயலாற்றிக்கொண்டிருக்கிறார்கள். மார்ச் 27 -ம் தேதி முதல் புதுச்சேரியில் விமான சேவை தொடங்க உள்ளது. புதுச்சேரி வளர்ச்சிக்கு விமான சேவை முக்கியம். அதற்காக தொடர் முயற்சி மேற்கொண்டோம். புதுச்சேரி - பெங்களூர், புதுச்சேரி- ஹைதராபாத் நகருக்கு இந்த விமான சேவை இருக்கும். இதனால் புதுச்சேரி மட்டுமல்லாமல், சுற்றியுள்ள கடலூர், நாகை, விழுப்புரம் போன்ற தமிழக பகுதிகளுக்கும் இந்த சேவை உதவிகரமாக அமையும்.

திருநல்லாறு சனீஸ்வரன் கோயில், சிதம்பரம் நடராஜர் கோயில், வேளாங்கண்ணி, நாகூர் போன்ற இடங்களுக்கு செல்லவும், ஆன்மிக சுற்றுலா வளர்ச்சியடையவும் இந்த சேவை உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். குடியரசு தலைவர் பதவிக்கு உங்களின் பெயர் பரீசிலிக்கப்படுவதாக கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு, "அதுகுறித்து எவ்வித கருத்தும் சொல்ல முடியாது. நான் இப்போதைக்கு குடிமகள் அவ்வளவுதான்"என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x