Published : 13 Mar 2022 01:46 PM
Last Updated : 13 Mar 2022 01:46 PM

சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரத்தில் முதல்வர் தனிகவனம் செலுத்தி ஆய்வு செய்து வருகிறார்: சேகர் பாபு

அமைச்சர் சேகர்பாபு | கோப்புப் படம்

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக தனிகவனம் செலுத்தி, அதுதொடர்பான விவரங்களை ஆய்வு செய்து வருகிறார். எனவே விரைவில் ஒரு நல்ல முடிவெடுத்து, சட்டத்தின்படி அங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசியது: "சிதம்பரம் நடராஜர் கோயிலின் உண்மை நிலையை கண்டறிவதற்கு இணை ஆணையாளர் ஒருவரை நியமித்துள்ளோம். அவரது அறிக்கை வரப்பெற்றவுடன், சட்ட வல்லுநர்களுடனும் கலந்தாலோசித்துக் கொண்டிருக்கின்றோம்.

இந்த பிரச்சினையப் பொருத்தவரையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக தனிகவனம் செலுத்தி, அதுதொடர்பான விவரங்களை ஆய்வு செய்து வருகிறார். எனவே விரைவில் ஒரு நல்ல முடிவெடுத்து, சட்டத்தின்படி அங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று அவர் கூறினார்.

முன்னதாக, சிதம்பரம் நடராஜர் கோயிலில் இருக்கும் சிற்றம்பல மேடைக்கு பக்தர்கள் செல்வது கோயில் நிர்வாகத்தால் ஏற்கெனவே தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே கடந்த மாதம், ஜெயசீலா என்றபெண், சிற்றம்பல மேடையில் ஏற முயன்றார். அப்போது தீட்சிதர்கள் அவரை தடுத்து வெளியே தள்ளியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சிதம்பரம் காவல்நிலையத்தில் அப்பெண் புகார் தெரிவிதிருந்தார்.

இந்நிலையில், இதனை மறுத்துள்ள சிதம்பரம் நடராஜர் கோயிலில் பூஜை செய்யும் தீட்சிதர்கள், கோயிலுக்கும் தீட்சிதர் சமூகத்துக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் சில துஷ்பிரயோகமான செயல்களை தீய சக்திகளுடன் சேர்ந்து செய்து வருகின்றனர்.பெரும்பான்மை கருத்தின் அடிப்படையில் கனகசபை (சிற்றம்பல மேடை) மீது யாரும் ஏறவேண்டாம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கோயில் நிர்வாகத்தில், பூஜையில் யாரும் தலையிடக் கூடாது என்று நீதிமன்ற உத் தரவும் உள்ளது என தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x