Published : 13 Mar 2022 12:40 PM
Last Updated : 13 Mar 2022 12:40 PM
சென்னை: உள்ளூர் தமிழனாக இருந்தாலும் சரி, உக்ரைனில் இருக்கும் தமிழனாக இருந்தாலும் அவர்களையும் காப்பாற்றுகிற இயக்கம் திமுக என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று (13-03-2022) நடைபெற்ற நாதஸ்வரக் கலைஞர் டி.என். ராஜரத்தினத்தின் கொள்ளுப் பெயரனின் திருமண நிகழ்ச்சி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்தது. இந்த விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி பேசிய முதல்வர், நாதஸ்வர சக்கரவர்த்தி திருவாடுதுறை டி.என்.ராஜரத்தினத்தின் சாதனைகள் மற்றும் பெருமைகளை பட்டியலிட்டு பேசினார். மேலும், முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் டி.என்.ராஜரத்தினத்துக்கு செய்யப்பட்ட சிறப்புகள் குறித்து விளக்கி பேசினார்.
தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் பேசியது: "தமிழ் என்றால் நமக்குத் தானாக ஒரு உத்வேகம் வந்துவிடுகிறது. அது உள்ளூர் தமிழனாக இருந்தாலும் சரி, உக்ரைனில் இருக்கும் தமிழனாக இருந்தாலும் அவர்களையும் காப்பாற்றுகிற இயக்கம் திமுக என்பது உங்களுக்குத் தெரியும். உக்ரைனில் இருப்பவர்கள் அங்கு அகதிகளாக ஆகிவிடுவார்களோ அல்லது ஆபத்தில் சிக்கி விடுவார்களோ என்று கருதிக் கொண்டிருந்த நேரத்தில் ஏறக்குறைய தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 2000 பேர் அங்கு இருக்கிறார்கள் என்ற செய்தியை நாம் கேள்விப்பட்டவுடன் இந்தியாவில் எந்த மாநிலமும் முன்வராத நிலையில் முதன்முதலில் தமிழகத்தில்தான் அவர்கள் அத்தனை பேரையும் இங்கு அழைத்து வருவதற்கு நாங்கள் பொறுப்பேற்றுக் கொள்கிறோம்.
எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை அவர்கள் அத்தனை பேரையும் பத்திரமாக அழைத்து வர வேண்டும் என்று முடிவு செய்து அதற்காக என்னென்ன முயற்சிகள் எல்லாம் எடுத்து வந்தோம் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். நேற்றோடு அத்தனை பேரும் வந்து சேர்ந்து விட்டார்கள். கடைசியாக வந்த 9 பேரை வரவேற்பதற்காக நானே விமான நிலையத்திற்கு சென்று வரவேற்ற காட்சிகளை நீங்கள் ஊடகங்களில் பார்த்திருப்பீர்கள்.
அதற்காக நம்முடைய திருச்சி சிவா தலைமையில் ஒரு குழு அமைத்து, அதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலாநிதி வீராசாமி, நம்முடைய அப்துல்லா, சட்டமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பி.ராஜா, அரசுத் துறையைச் சார்ந்திருக்கும் அதிகாரிகளை எல்லாம் குழுவாக அமைத்து, டெல்லியிலேயே பத்து நாள் தங்கி அத்தனை பேரையும் அழைத்து வந்திருக்கிறார்கள்.
எனவே தமிழன் எங்கிருந்தாலும் அவர்களைக் காப்பாற்றுகிற இயக்கம்தான் திமுக என்பதற்கு இதை ஒரு எடுத்துக்காட்டாக சுட்டிக்காட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். எனவே அப்படிப்பட்ட தமிழ்க் குடும்பத்தில் நடைபெறும் இந்த மணவிழா நிகழ்ச்சியில் உள்ளபடியே நீங்கள் எல்லாம் கலந்து கொண்டு இங்கு மனதார வாழ்த்திக் கொண்டிருக்கிறீர்கள்" என்று அவர் கூறினார்.
துர்கா ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து: முன்னதாக, திருமண விழாவில் பேசத் தொடங்கிய முதல்வர் ஸ்டாலின், "முதலில் என்னுடைய துணைவியாருக்கு நான் பிறந்தநாள் வாழ்த்து சொல்ல விரும்புகிறேன். இரவு 12 மணிக்கே சொல்லிவிட்டேன். இருந்தாலும் எல்லோரும் மேடையில் சொன்னார்களே, நீங்கள் மட்டும் சொல்லவில்லையே என்று வீட்டிற்குச் சென்று பிறகு கேட்டுவிடக்கூடாது. பயந்து அல்ல, எல்லோரும் வாழ்த்திய அந்த அடிப்படையில் இன்றைக்கு 63-வது வயதில் அடியெடுத்து வைத்திருக்கும் என்னுடைய துணைவியாருக்கு உங்களோடு சேர்ந்து நானும் என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்" என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT