அன்புமணி ராமதாஸ் | கோப்புப் படம்.
அன்புமணி ராமதாஸ் | கோப்புப் படம்.

நிலக்கரி பற்றாக்குறையால் மின்உற்பத்தி பாதிப்பு: மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

Published on

சென்னை: நிலக்கரி பற்றாக்குறையால் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒடிஷாவிலிருந்து அதிக அளவில் நிலக்கரி கொண்டு வருவதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: "நிலக்கரி பற்றாக்குறையால் மேட்டூர், தூத்துக்குடியில் தலா 210 மெகாவாட் அனல் மின்நிலையங்களில் மின்னுற்பத்தி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதனால், 4320 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையங்களில் அதிகபட்சமாக 2240 மெகாவாட் மட்டுமே உற்பத்தியாகியுள்ளது.

தமிழகத்தின் 5 அனல் மின் நிலையங்களுக்கு தினமும் 60,000 டன் நிலக்கரி தேவை. ஆனால், 30,000 டன் மட்டும் தான் நிலக்கரி வருகிறது. ஒடிஷாவின் பாரதிப் துறைமுகத்தில் நிலக்கரி குவிந்து கிடக்கும் போதிலும், ஏற்றி வருவதற்கு கப்பல்கள் இல்லாததே பற்றாக்குறைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

நிலக்கரி பற்றாக்குறை நீடித்தால் மின்னுற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு, தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்க வேண்டியிருக்கும். அது மின்சார வாரியத்தை கடுமையாக பாதிக்கும். இல்லாவிட்டால் கடுமையான மின்வெட்டு ஏற்படும். மக்களால் அதை தாங்கிக் கொள்ள முடியாது.

கூடுதல் கப்பல்களை ஏற்பாடு செய்து ஒடிஷாவிலிருந்து அதிக அளவில் நிலக்கரி கொண்டு வருவதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் அனல் மின் நிலையங்களை முழு அளவில் இயங்கச் செய்து முழு அளவில் மின்னுற்பத்தி செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in