1.33 கோடி பேர் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தவில்லை: தமிழக சுகாதாரத் துறை செயலர் தகவல்

1.33 கோடி பேர் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தவில்லை: தமிழக சுகாதாரத் துறை செயலர் தகவல்
Updated on
1 min read

தமிழகத்தில் 1.33 கோடி பேர் இன்னும் 2-வது தவணை கரோனா தடுப்பூசி செலுத்தவில்லை என்று சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் 24-வதுமெகா கரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. சென்னை திருவல்லிக்கேணி, ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்த முகாமை சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம், மருத்துவமனை டீன் ஜெயந்தி மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உடன் இருந்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதா வது:

பொதுமக்களிடம் கவனக் குறைவு

தமிழகத்தில் இதுவரை 91.77 சதவீதம் முதல் தவணை தடுப்பூசியும்,73.74 சதவீதம் 2-வது தவணை தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. பூஸ்டர் டோஸ் தடுப்பூசி 6.81 லட்சம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. கரோனா தொற்று குறைந்து விட்டது, அதனால் தடுப்பூசி தேவையில்லை என பொதுமக்கள் கவனக்குறைவுடன் இருக்கக் கூடாது.

தமிழகத்தில் 1.05 கோடி பேர் கோவிஷீல்டு, 27.46 லட்சம் பேர் கோவாக்சின் என 1.33 கோடி பேர்2-வது தவணை தடுப்பூசியை செலுத்தாமல் உள்ளனர். தமிழகத்தில் 2-வது அலையில் 3.13 லட்சம்பேர் கரோனா சிகிச்சையில் இருந்தனர். அந்த நிலைமை தற்போது மாறி1,461 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். கரோனா தொற்றை முழுமையாக ஒழிக்க மீதமுள்ளவர்களும் தடுப்பூசி செலுத்த வேண்டும்.தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தியதால்தான் 3-வது அலையில் உயிரிழப்பு கட்டுப்படுத்தப்பட் டது.

தமிழகத்தில் நோய் கட்டுப்பாட்டுபகுதிகள் குறைந்துள்ளன. அந்தவகையில் கிராமப்புறங்களில் உள்ள 1.28 லட்சம் குடியிருப்பு பகுதிகளில் 3 பேருக்கு மேல் தொற்று உள்ள பகுதிகள் என 2இடங்களும், நகர்ப்புறங்களில் உள்ள 1.26 லட்சம் தெருக்களில் 3 பேருக்கு மேல் தொற்று உள்ள பகுதிகள் என 2 தெருக்களும் மட்டுமே உள்ளன.

டெங்கு பாதிப்பு குறைந்தது

டெங்கு காய்ச்சல் படிப்படியாகக் குறைந்து, நாள் ஒன்றுக்கு 10முதல் 20 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். சென்னை அரசு பொது மருத்துவமனையில் கரோனா சந்தேக அடிப்படையில் மட்டுமே 8 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் 2 பேரும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் ஒருவரும் சிகிச்சையில் உள்ளனர். கரோனா தொற்று குறித்து ஆதாரமற்ற தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம்.

இவ்வாறு ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in