Published : 13 Mar 2022 06:54 AM
Last Updated : 13 Mar 2022 06:54 AM

நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளை வழங்குவதில் தொடர்ந்து சிக்கல் - சுமுக தீர்வு காண திமுக கூட்டணியில் பேச்சுவார்த்தை தீவிரம்: கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் தகவல்

சென்னை

நகர்ப்புற உள்ளாட்சிகளில் ஒருசிலஇடங்களில் பதவிகளை திமுக கூட்டணி கட்சிகளுக்கு வழங்குவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. இதற்கு சுமுக தீர்வு காண தீவிர பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூட்டணி கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வெற்றிக்கு பிறகு, கூட்டணி கட்சிகளுக்கு பதவிகளை திமுக பிரித்து வழங்கியது. சில இடங்களில், கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிகவுக்கு ஒதுக்கப்பட்ட பதவிகளில் திமுகவினர் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இது கூட்டணி கட்சிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. சில இடங்களில் தள்ளுமுள்ளு, மோதல்கள், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன.

இதற்கிடையே, விசிக தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் ஆகியோர் இந்த விஷயத்தில் தங்களது வருத்தத்தை வெளிப்படுத்தினர். திமுக தலைவரான முதல்வர்ஸ்டாலின் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதைத் தொடர்ந்து, ‘கூட்டணிக்கு ஒதுக்கிய இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுகவினர் உடனடியாக பதவி விலக வேண்டும். பிறகு, என்னை வந்து சந்திக்க வேண்டும்’ என்று ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்த உத்தரவை மதிக்காதவர்கள், கட்சியில் இருந்துநீக்கப்படுவார்கள் என்றும் எச்சரித்தார்.

தொடர்ந்து இழுபறி

இதைத் தொடர்ந்து, கூட்டணிக்கு ஒதுக்கிய இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுகவினர் பெரும்பாலானோர் ராஜினாமா செய்தனர். இருப்பினும், சில இடங்களில் இன்னும் இழுபறி தொடர்ந்து நீடிக்கிறது.

காங்கேயம், தேனி, உசிலம்பட்டி, ஆரணி, பெரும்புதூர் உட்பட காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட பதவிகள், கொல்லங்கோடு, வீரவநல்லூர், திருமுருகன்பூண்டி, சேரன்மாதேவி, பி.என்.பாளையம் என மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட பதவிகள், நெல்லிக்குப்பம், பெரியகுளம் உள்ளிட்ட நகராட்சிகளில் விசிகவுக்கு ஒதுக்கப்பட்ட பதவிகளை கூட்டணி கட்சிகளுக்கு வழங்குவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.

குறிப்பாக, கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை பேரூராட்சி தலைவர் பதவி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த இடத்தில் திமுகவை சேர்ந்தவர் போட்டி வேட்பாளராக களமிறங்கி, வெற்றி பெற்றார். இதற்கு காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்த சூழலில், இதற்கு மேல் திமுகவினருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம் என்று தமிழககாங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாக தகவல் வெளியானது. அது உண்மையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்டபடி, கூட்டணிக் கட்சிகளுக்கு பதவியை வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருவதோடு, பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது. இப்பிரச்சினைக்கு சுமுக தீர்வு கண்டு, கூட்டணி கட்சிகளின் தலைவர்களை சமாதானம் செய்வதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

விரைவில் சுமுக தீர்வு

இதுதொடர்பாக திமுக கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளிடம் பேசியபோது, ‘‘திமுக கூட்டணி வலுவாகஇருக்கிறது. அடுத்தடுத்த தேர்தல்களில் சிறப்பான வெற்றியையும் பெற்றுள்ளது. இருப்பினும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சிலரிடம் இணக்கமான சூழல் இல்லை.முதல்வரின் உத்தரவை ஏற்று,பெரும்பாலானோர் ராஜினாமா செய்திருப்பது வரவேற்கக்தக்கது. இந்த பதவிகளுக்கு விரைவில் மறுதேர்தல் நடக்க உள்ளது.

ஆனால், இன்னும் சிலர் பிடிவாதமாக இருப்பது கவலை அளிக்கிறது. கூட்டணி தர்மத்தை திமுகவினர் கடைபிடிக்க வேண்டும் என்று முதல்வரிடம் கூட்டணி கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். திமுக தலைவரான முதல்வர் ஸ்டாலின் விரைவில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்கிறோம்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x