

காஞ்சிபுரம் காமாட்சி அம்மனுக்கு வைரம், வைடூரியங்கள் பதித்த ரூ.5 கோடி மதிப்புள்ள தங்க கவசத்தை காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மார்ச் 14-ம் தேதி அணிவிக்க உள்ளார்.
இது தொடர்பாக சங்கர மடத்தின் மேலாளர் ந.சுந்தரேச அய்யர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: ஆந்திர மாநில பக்தர் ஒருவர் காஞ்சிபுரம் காமாட்சி அம்மனுக்கு வைரம், வைடூரியம் மற்றும் நவரத்தினக் கற்கள் பதித்த ரூ.5 கோடி மதிப்பிலான தங்கக் கவசத்தை காணிக்கையாக செய்து சமர்ப்பிக்க உள்ளார்.
இந்த தங்கக் கவசம் காஞ்சிபுரம் சங்கர மடத்தில்இருந்து திங்கள்கிழமை மாலை காமாட்சி அம்மன் கோயிலுக்கு மங்கள மேள வாத்தியங்களுடன் ஊர் வலமாக எடுத்துச் செல்லப்படும். இந்த ஊர்வலத்துக்கு சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தலைமை தாங்குகிறார்.
ஊர்வலம் காமாட்சி அம்மன் கோயிலுக்கு சென்றதும், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளால் நடத்தப்பட்டு, அவரது திருக்கரங்களாலேயே அம்மனுக்கு தங்கக்கவசம் அணிவிக்கப்பட உள்ளது. இக்கவசம் அணிவிப்பதை ஒட்டி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் தொடங்கி திங்கள்கிழமை நண்பகல் வரை, கும்பகோணம் தினகர சர்மா தலைமையில் ஹோமங்கள் நடைபெறுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை காமாட்சி அம்மன் கோயில் ஸ்தானீ கர்கள் செய்து வருகின்றனர் என்றார்.