Published : 05 Apr 2016 09:00 AM
Last Updated : 05 Apr 2016 09:00 AM

பேசிக்கொண்டு இருக்கும்போதே பட்டியலை வெளியிட்டது அதிமுக- வேல்முருகன் வருத்தம்

அதிமுக வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அத்துடன், இந்திய குடியரசு கட்சி, சமக, முக்குலத்தோர் புலிப்படை உள்ளிட்ட 6 கட்சிகளுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதிமுகவுக்கு ஆதரவு அளித்த இந்திய வாழ்வுரிமை கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக் போன்ற கட்சிகளுக்கு ஒரு தொகுதிகூட ஒதுக்கப்படவில்லை. இதுகுறித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கூறியதாவது:

தமாகா வராத நிலையில், அதிமுகவுக்கு ஆதரவு அளித்த கட்சிகளில் தமிழக வாழ்வுரிமை கட்சிதான் அடுத்த நிலையில் உள்ள பெரிய கட்சியாக இருந்தது. எங்கள் கட்சியில் 6 முன்னாள் எம்எல்ஏக்கள், பாமகவில் இருந்து வந்த 15 மாவட்ட செயலாளர்கள் உள்ளனர். இவர்களுக்கும் ஏதாவது செய்ய வேண் டும் என கூறியிருந்தேன். பட்டியல் கேட்டனர். 11 தொகுதி பட்டியல் கொடுத்தேன்.

அடுத்த இருமுறை பேசியபோது, தொகுதிகளை குறைக்குமாறு கூறினர். இறுதியாக தமிழகத்தில் 6, புதுச்சேரியில் 1 தொகுதி கேட்டிருந்தேன். நேற்று (3-ம் தேதி) வரைகூட தொடர்ந்து அமைச்சர்கள் பேச்சு நடத்தினர். இன்று (4-ம் தேதி) முதல்வரை சந்திக்க நேரம் கேட்டிருந்தேன். பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போதே பட்டியலை வெளியிட்டுவிட்டனர்.

'இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும், தொகுதிகளை இன்னும் குறைக்க வேண்டும்' என்று என்னிடம் கூறியிருந்தால் மாவட்ட செயலாளர்களிடம் பேசி ஏற்றுக் கொண்டிருப்பேன். எதையும் கூறாமல் பட்டியலை வெளியிட்டுள்ளனர். நாளை (5-ம் தேதி) அவசர மாநில செயற்குழு கூட்டம் நடக்கிறது. இதில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்போம்.

இவ்வாறு வேல்முருகன் கூறினார்.

நம்பிக்கையுடன் காத்திருக்கும் மூமுக

மூவேந்தர் முன்னணிக் கழகத் தலைவர் டாக்டர் சேதுராமன் பேசியபோது, ''நாங்கள் 10 ஆண்டுகளாக அதிமுகவை ஆதரிக்கிறோம். இம்முறை 5 தொகுதிகள் ஒதுக்குமாறு தலைமையிடம் தெரிவித்தோம். எங்களுக்கு ஒரு தொகுதி ஒதுக்கி இருப்பதாக நேற்று மாலைகூட அதிமுக அமைச்சர்கள் சொன்னார்கள். ஆனால், முதல்வர் அறிவித்த பட்டியலில் எங்களுக்கு தொகுதி எதுவும் ஒதுக்கப்படவில்லை. இது வருத்தமளிக்கிறது. எப்படியும் எங்களுக்கு ஒரு தொகுதியாவது அதிமுக ஒதுக்கும் என நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x