

தமிழகத்தில் கிழக்கு கடல் பகுதியில் மீன்பிடி தடைக்காலம் வரும் 15-ம் தேதி முதல் அமலுக்கு வருகி றது.
மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு தமிழகத்தின் கிழக்கு கடல் பகுதியில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ம் தேதி முதல் மே 29-ம் தேதி வரை 45 நாட்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்படும். இந்த காலத்தில் குறிப்பிட்ட பகுதிகளில் விசைப் படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் மூலம் மீன்பிடிக்க அனுமதி கிடையாது. அதேநேரத்தில் நாட்டுப் படகுகளில் மீன்பிடிக்க எந்தவித தடையும் இல்லை.
தூத்துக்குடி ஆட்சியர் ம. ரவிக் குமார் விடுத்துள்ள அறிக்கையில், ‘‘திருவள்ளூர் வருவாய் மாவட்ட கடல் பகுதியிலிருந்து கன்னியா குமரி மாவட்டம், கன்னியாகுமரி நகரம் வரை ஏப்ரல் 15-ம் தேதி முதல் மே 29-ம் தேதி வரை விசைப் படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் மூலம் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்கள் இந்த 45 நாட்களில் தங்கள் படகுகளை சீரமைத்தல், பராமரித்தல், வலைகளை தயார் செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்வர்.