Published : 13 Mar 2022 04:00 AM
Last Updated : 13 Mar 2022 04:00 AM
சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. பெரும்பாலான காய்கறிகள் கிலோ ரூ.10 மற்றும் அதற்கும் குறைவாக விற்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு பெய்த தொடர் கனமழை காரணமாக காய்கறி பயிர்கள் அழிந்தன. இதனால் உற்பத்தி பாதிக்கப்பட்டு, கோயம்பேடு சந்தைக்கு வரும் காய்கறிகளின் அளவு குறைந்தது. இதன் தாக்கத்தால் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்தது.
அனைத்து காய்கறிகளும் கிலோ ரூ.25-க்கு மேல் விற்கப்பட்டன. கோயம்பேடு சந்தையில் மொத்த விலையில் தக்காளி கிலோ ரூ.110 வரை உயர்ந்தது. சென்னையில் சில்லறை விற்பனை சந்தைகளில் கிலோ ரூ.160 வரை உயர்ந்திருந்தது.
தற்போது பருவமழைக் காலம் முடிந்து கோடை காலத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில் கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. பெரும்பாலான காய்கறிகள் கிலோ ரூ.10-க்குள் விற்கப்பட்டு வருகிறது.
நேற்றைய நிலவரப்படி, புடலங்காய் ரூ.5, முட்டைக்கோஸ், நூக்கல், முள்ளங்கி தலா ரூ.8, பீட்ரூட், பாகற்காய், கத்தரிக்காய், வெண்டைக்காய், அவரைக்காய், தக்காளி தலா ரூ.10 என விலைவீழ்ச்சி அடைந்துள்ளது. மேலும், உருளைக்கிழங்கு ரூ.15, பெரிய வெங்காயம் ரூ.16, சின்ன வெங்காயம் ரூ.20, பீன்ஸ் ரூ.20 என விற்கப்படுகிறது. முருங்கைக்காய், கேரட், பச்சை மிளகாய் ஆகியவை மட்டும் கிலோ ரூ.40-க்கு விற்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கோயம்பேடு மலர்,காய்கறி, கனி வியாபாரிகள் நலச்சங்கத் தலைவர் எம்.தியாகராஜன் கூறும்போது, “கனமழையால் மாநிலம் முழுவதும் நீர் வளம் பெருகியுள்ளது. அதனால் காய்கறி விளைச்சல் அதிகரித்து, சந்தைக்கு வரத்தும் அதிகரித்துள்ளது. அதன் விளைவாக காய்கறி விலை குறைந்துள்ளது. வரும் ஏப்ரல் 15 தேதி வரை இதே நிலை நீடிக்க வாய்ப்புள்ளது. அதன் பிறகு விலை உயரக்கூடும்” என்றார்.
கனமழையால் மாநிலம் முழுவதும் நீர் வளம் பெருகியுள்ளது. அதனால் காய்கறி விளைச்சல் அதிகரித்து, சந்தைக்கு வரத்தும் அதிகரித்துள்ளது. அதன் விளைவாக காய்கறி விலை குறைந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT