Published : 13 Mar 2022 05:46 AM
Last Updated : 13 Mar 2022 05:46 AM
தாம்பரம் மாநகராட்சியில் பாலாற்றுகுடிநீர் திட்டப்பணிகள்களில் பாதிப்புஏற்பட்டுள்ளதால், மேயர், துணைமேயர் ஆகியோர் நேற்று அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டனர்.
தாம்பரம் மாநகராட்சி பகுதிகளுக்கு தமிழ்நாடு குடிநீர் மற்றும் சென்னை குடிநீர் வாரியங்கள் மூலம் தண்ணீர் பெறப்பட்டு மக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. மற்றொரு புறம், தாம்பரம் நகரத்துக்கு மட்டும் பாலாற்று படுக்கையில் மேலச்சேரி, பழைய சீவரம், வில்லியம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், 18 கிணறு மற்றும் 29 ஆழ்த்துளை கிணறுகள் அமைக்கப்பட்டன.
தினமும் இந்த ஆதாரங்களில் இருந்து குழாய் மூலம் குடிநீர் கொண்டு வரப்பட்டு மேற்கு மற்றும் கிழக்கு தாம்பரம் பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், சமீபத்தில் பெய்த மழையில், பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால், மணல் அரிப்பு ஏற்பட்டு 12 கிணறுகள், 29 ஆழ்த்துளை கிணறுகள் காணாமல் போய்விட்டன. தற்போது 6 கிணறுகள் மட்டுமே பயன்படுத்தும் நிலையில் உள்ளது. இவற்றின் மூலம்தான் தற்போது, தண்ணீர் பெறப்பட்டு தாம்பரம் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், கோடை காலம் தொடங்க உள்ள நிலையில் குடிநீர்பற்றாக்குறை ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், பாலாற்றில் பயன்பாட்டில் உள்ள மற்றும் காணாமல் போன குடிநீர் ஆதாரங்களை ஆய்வு செய்து, அவற்றை மேம்படுத்த, மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.
இதையடுத்து, நேற்று காலை மாநகராட்சி மேயர் க.வசந்தகுமாரி, துணை மேயர் ஜி.காமராஜ், ஆணையர் மருத்துவர்.ம.இளங்கோவன் மற்றும் அதிகாரிகள் பாலாற்று படுக்கையில் உள்ள குடிநீர் ஆதாரங்களில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, சேதமடைந்த மற்றும் தூர்ந்து போன கிணறுகளை தூர்வாரி, மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்தும், புதிய ஆதாரங்களை ஏற்படுத்துவது குறித்தும், அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.
பாலாற்றுப் படுகையில் தாம்பரம் நகரத்துக்கு மட்டும் தினமும் 90 லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளத்துக்குப் பிறகு கிணறுகள், ஆழ்துளை கிணறுகளுக்கு சேதம் ஏற்பட்டது. இதனால், போதிய குடிநீர் பெற முடியவில்லை. தற்போது, ஓரளவுக்கு நிலைமையை சீர் செய்து, தினமும் 60 லட்சம் லிட்டரை கொண்டு பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இது போதுமானதாக இல்லை. மேலும் வரும் கோடை காலத்தை கவனத்தில் கொண்டு அனைத்து சீரமைப்புப் பணிகளையும் விரைவுபடுத்தும் நோக்கில் நேற்று மேயர் மற்றும் துணை மேயர் ஆகியோருடன் ஆய்வு மேற்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT