Published : 13 Mar 2022 04:15 AM
Last Updated : 13 Mar 2022 04:15 AM

தமிழகத்தில் குழந்தைகள், சிறுவர்கள், பெண்களுக்கு குடற்புழு மாத்திரை வழங்கும் பணி நாளை தொடக்கம்

சென்னை

தமிழகத்தில் குழந்தைகள், சிறுவர்கள், பெண்களுக்கு குடற்புழு மாத்திரை வழங்கும் பணி நாளைதொடங்கி ஒருவாரம் நடைபெறுகிறது என்று தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தேசிய குடற்புழு நீக்க வாரம் மார்ச் 14-ம் தேதி (நாளை) முதல்வரும் 21-ம் தேதி வரை அனுசரிக்கப்படுகிறது. தமிழகத்தில் அனைத்து அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மற்றும்அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளிகள், கல்லூரிகளில் தேவைக்கேற்ப குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

1 முதல் 19 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், 20முதல்30 வயதுடைய பெண்களுக்கு (கருவுறாத மற்றும் பாலூட்டாதவர்கள்) குடற்புழு நீக்க மாத்திரை நாளை முதல் வரும் 19-ம் தேதி வரை தினமும் காலை9 மணி முதல் 4 மணி வரையிலும் வழங்கப்படவுள்ளது. விடுபட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு வரும் 21-ம் தேதி சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

1 முதல் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 1/2 மாத்திரை(200மிகி), இரண்டு வயதிற்கு மேல் 19 வயதுவரை உள்ளகுழந்தைகளுக்கு மற்றும் பெண்களுக்கு 1 மாத்திரை அல்பெண்டசோல் (400மிகி) வழங்கப்படுகிறது. அல்பெண்டசோல் மாத்திரை அனைவருக்கும் பாதுகாப்பானது. தமிழகத்தில் 1 முதல் 19 வயதுடைய 2.39 கோடி குழந்தைகள், 54 லட்சத்து 67,069 பெண்கள் உள்ளனர். மொத்தம் 3 கோடி குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படவுள்ளன.

1.93 கோடி குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்குவதற்கு ரூ.2.54 கோடி நிதி தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. முகாம் பணியில் 54.439 அங்கன்வாடிபணியாளர்களும், சுகாதாரத்துறை பணியாளர்களும், சுகாதார பயிற்சி மேற்கொள்ளும் பயிற்சியாளர்கள் மற்றும் ஆஷா பணியாளர்கள் ஈடுபடவுள்ளனர்.

ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 10-ம் தேதி மற்றும் ஆகஸ்ட் 10-ம்தேதி குடற்புழு நீக்க நாளாக அனுசரிக்கப்படும். இந்த ஆண்டு கரோனா தொற்று பரவல் இருப்பதால், குடற்புழு நீக்க முகாம் மார்ச் மாதம் அனுசரிக்கப்படுகிறது. குடற்புழு மாத்திரை குடற்புழுக்கள் முற்றிலுமாக நீக்கப்படுகிறது. ரத்தசோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டை தடுக்கிறது. நோய் எதிர்ப்புசக்தியை அதிகரித்து சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது. நினைவாற்றல், அறிவுத்திறன் மற்றும் உடல்வளர்ச்சியை மேம்படுத்தவும். ஆரோக்கியமாக இருக்கவும் பயன்படுகிறது. எனவே, அனைத்து பெற்றோர்களும், இந்த அரியவாய்ப்பினை பயன்படுத்தி, தங்கள் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை பெற்று கொண்டுள்ளனரா என்பதனை உறுதிசெய்து, இந்த முகாம் சிறப்பாக நடைபெற முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். குடற்புழு தொற்றிலிருந்து விடுபட்டு பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியமான எதிர்கால வாழ்விற்கு அனைவரும் இணைந்து செயல்படுவோம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 1 முதல் 19 வயதுடைய 2.39 கோடி குழந்தைகள், 54,67,069 பெண்கள் உள்ளனர். மொத்தம் 3 கோடி குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படவுள்ளன

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x