இருபோகம் விளையும் விவசாய நிலத்தில் இயற்கை எரிவாயு குழாய் பதிக்க கஞ்சங்கொல்லை விவசாயிகள் எதிர்ப்பு

இயற்கை எரிவாயு குழாய் அமைக்கப்பட உள்ள நிலங்கள்.
இயற்கை எரிவாயு குழாய் அமைக்கப்பட உள்ள நிலங்கள்.
Updated on
1 min read

காட்டுமன்னார்கோவில் அருகே கஞ்சங்கொல்லை கிராமத்தில் விவசாய நிலத்தில் இயற்கை எரி வாயு குழாய் பதிக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

காட்டுமன்னார்கோவில் வட்டத்தின் கடைகோடி கிராமம் கஞ்சங்கொல்லை. இந்த கிராமத்தில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. கீழணையில் தேக்கப்படும் தண்ணீரைப் பயன்படுத்தி இங்கு சுமார் 500 ஏக்கரில் ஆண்டு தோறும் இருபோக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் எண்ணூரில் இருந்து தூத்துக்குடி வரை இயற்கை எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தின் கீழ், விளைநிலங்களில் கீழ்குழாய் பதிப்பதற்கு இக்கிராமத்தை சேர்ந்த 100 விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்த கடிதங்கள் அனுப்பப்பட்டிருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் கடந்த மாதம் துணை ஆட்சியர் கண்ணனிடம், விளைநிலங்கள் வழியாக இயற்கை எரிவாயு கொண்டு செல்வதற்கு குழாய் பதிக்க கூடாது எனக்கூறி ஆட்சேபனை தெரிவித்து தனித் தனியாக மனுக்கள் அளித்தனர்.

இந்த நிலையில் கஞ்சங்கொல்லை கிராம நிர்வாக அலுவலகத்தில் துணை ஆட்சியர் ஜெ.கண்ணன் தலைமையில் விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் கிராம நிர்வாக அலுவலர் ரவி முன்னிலையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள், "இயற்கை எரிவாயு கொண்டு செல்வதற்கான குழாய்களை பதிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அரசு காவிரி படுகையை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக கடந்த 2020-ம் ஆண்டு அறிவித்துள்ளது.

எங்கள் கிராமம் காவிரி டெல்டா கடைமடை பகுதி என்பதால் நாங்கள் அனுமதிக்க முடியாது" என்று கூறினர்.

இதற்கு பதில் அளித்த அதிகாரிகள், குழாய் பதிக்கும் பணி நடைபெறும் எனவும், பாதிப்படையும் விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு தொகை வழங்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in