Published : 13 Mar 2022 04:30 AM
Last Updated : 13 Mar 2022 04:30 AM

வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோயிலில் கருங்கல் நீராழி மண்டபம் பெயர்த்தெடுப்பு: சோழர் கால கல்வெட்டும் மாயம் என குற்றச்சாட்டு

குளக்கரையில் உள்ள பழமையான நீராழி மண்டபம்.

புதுச்சேரி

வில்லியனூரில் திருக்காமீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயில் வளாகம் இரண்டு ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ளது. அதன் அனைத்து கோபுரங்களும் சிறப் பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலில் ஏராளமான சன்னதிகள் உள்ளன.

இக்கோயில் வளாகம் சோழர்களால் கட்டப்பட்டதாக வரலாறு உண்டு. குறிப்பாக கோயில் கட்டமைப்பு 12-ம்நூற்றாண்டில் கட்டப்பட்டதாகவும், கோயிலின் பிற சேர்க்கைகள் இடைக்கால சோழர்கள் மற்றும் விஜயநகர பேரரசால் கட்டப்பட்டவை என்றும் கூறுகின்றனர். ராஜா நாராயண சம்புவராயர் (1339-63) என்பவர் சுமார் 850 ஏக்கர் நிலம் இக்கோயிலுக்கு நன்கொடை அளித்ததாக கல்வெட்டுகள் உள்ளன.

இந்நிலையில் அரசுக் கல்லூரி முன்னாள் முதல்வரும், பேராசிரியருமான முனைவர் இளங்கோ கூறுகையில், “புதுச்சேரி திருக்காமீஸ்வரர் கோயில் தெப்பக்குள சீரமைப்பு பணியில் குளத்தில் இருந்த முதலாம் குலோத்துங்க சோழர் காலக்கல்வெட்டுகளை தொலைத்து விட்டனர். இது ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது.

குளத்தின் நடுவே இருந்த பழமையான கருங்கல் நீராழி மண்டபத்தை பெயர்த்து எடுத்து விட்டு சிமெண்டால் ஆன புது நீராழி மண்டபத்தைக் கட்டியுள்ளனர். பழைய நீராழி மண்டபத்தை குளக்கரையில் வைத்து விட்டனர். குளக்கரையில் உள்ள நீராழி மண்டபமானது பல நூறு ஆண்டுகளுக்கு முந்தையது. இது நாயக்கர் காலத்தைச் சேர்ந்தது. பழமை மாறாமல் புதுப்பிக்கும் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள சூழலில் வரலாற்றைச் சிதைக்கலாமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அரசு உயர் அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, “மத்திய அரசின்சுற்றுலாத் தலங்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் திருக்காமீஸ்வரர் கோயிலில் திருப்பணிகள் நடக்கின்றன. குளக்கரை யைச் சுற்றி விளக்குகள் பொருத்தி நவீனப்படுத்தப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக முன்பே நீராழி மண்டபத்தை எடுத்து விட்டு புதியதை அமைத்துள்ளனர். கல்வெட்டுகள் பத்திரமாக இருக்கிறது. வில்லியனூர் திருக்காமீஸ்வரர், திருக் காஞ்சி கங்கவராக நதீஸ்வரர் கோயில்களில் மத்திய அரசு திட்டத்தின் கீழ் ரூ.5.58 கோடியில் பணிகள் நடக்கின்றன” என்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x