Published : 07 Apr 2016 09:30 AM
Last Updated : 07 Apr 2016 09:30 AM

காப்பீட்டு திட்டத்தில் பின்தங்கிய அரசு மருத்துவமனைகள்: 7 ஆண்டுகளில் ரூ.2,500 கோடி ஈட்டிய தனியார் மருத்துவமனைகள்!

கடந்த 7 ஆண்டுகளில் தனியார் மருத்துவமனைகள் முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தில் ரூ.2,500 கோடி வருவாய் ஈட்டியுள்ளன. இந்த வருவாயில், தமிழகம் முழுவதும் 15 மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளை கட்டி இருக்கலாம் என சமூக ஆர்வலர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

ஒரு காலத்தில் ராஜாஜி, கக்கன், அண்ணா போன்ற தலைவர் கள் எல்லாம் அரசு மருத்துவமனை களில்தான் சிகிச்சை எடுத்துக் கொண்டனர். அரசு மருத்துவ மனையில் சிகிச்சை மேற்கொள் வதை அவர்கள் கவுரவமாக நினைத் தனர். தற்போது, அதற்கு நேர்மா றாக அரசியல் தலைவர்களும், பொதுமக்களும் அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெறுவதை கவுரவக் குறைச்சலாக கருதுகின் றனர். அதற்கு சமீபத்திய சான்று தமிழக அரசின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்.

இந்த திட்டத்தில், அரசு மருத்துவ மனைகளில், ரூ.1 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரையிலான நவீன உயிர் காக்கும் அறுவை சிகிச்சைகள் தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக மேற்கொள்ளப்படு கிறது. ஆனால், இந்த திட்டத்தில், மக்கள், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முன் வராமல் தனி யார் மருத்துவமனைகளை நோக்கி செல்கின்றனர். இதனால், முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தில், தனியார் மருத்துவமனைகள் அதிகளவு வருவாய் ஈட்டி வருகின்றன.

இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் பெற்ற தகவல்கள் குறித்து மதுரையைச் சேர்ந்த சுகாதார சமூக ஆர்வலர் சி. ஆனந்த்ராஜ் கூறியதாவது: தென் இந்தியாவில் முதன்முதலில், கடந்த 2003-ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் யஷஸ்வினி, 2007-ல் ஆரோக்யஸ்ரீயும், கேரளாவில் குடும்பசி என்ற பெயரில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு செயல்பட்டன.

கடைசியாக, தமிழகத்தில் கடந்த 2009-10-ம் ஆண்டு கலைஞர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் என்ற பெயரில், ரூ.517 கோடி நிதி ஒதுக்கீட்டுடன், ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் தனியார் நிறுவனத் துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு, இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அந்த ஆண்டில், அரசு மருத்துவ மனையில் வெறும் 0.7 சதவீதம் (ரூ.4 கோடி) அளவுக்கே நிதியை பயன்படுத்தினர். அதே ஆண்டு தனியார் மருத்துவமனைகள் 75 சதவீதம் (ரூ.391 கோடி) நிதியை பயன்படுத்தி கொண்டனர். இது அரசு மருத்துவமனைகள் பயன் படுத்தியதைவிட சுமார் 100 மடங்கு அதிகமாகும்.

இதேபோல, கடந்த 2010-11ம் ஆண்டும் இந்த திட்டத்தில் அரசு மருத்துவமனைகளின் பங்களிப்பு குறைவாக இருந்தது. அதனால், 2011-ம் ஆண்டு இந்த திட்டத்தில் நோயாளிகளுக்கு அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சை அளிப்பதை ஊக்குவிக்கும் வகையில், சிகிச்சை மேற்கொள்ளும் அரசு மருத்து வர்கள் மற்றும் இதர மருத்துவ பணியாளர் குழுவினருக்கு 15 சதவீதம் ஊக்கத் தொகையும், மருத்துவமனையின் வளர்ச்சிக்கு நேரடி நிதியாக 25 சதவீதம் பயன் படுத்திக் கொள்ளவும், தமிழக அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை புதிய திட்டத்தை நடை முறைப்படுத்தினர்.

இதன்பிறகு, அரசு மருத்துவ மனைகளில் மருத்துவர்கள் ஏழை, எளிய மக்களுக்கு காப்பீட்டு திட்ட நிதியை பயன்படுத்தி உயிர்காக்கும் அறுவை சிகிச்சைகளை ஓரளவு மேற்கொண்டனர். அதனால், முந்தைய 2 ஆண்டுகளுக்கு ரூ.13 கோடி மட்டுமே பயன்படுத்தியிருந்த அரசு மருத்துவமனைகள், அடுத்த ஒரே ஆண்டில் மட்டும் சுமார் ரூ.148 கோடியை பயன்படுத்தினர்.

அதற்கு அடுத்த ஆண்டு 2013-14ல் இன்னும் ரூ.100 கோடி அதிகரித்து ரூ.245 கோடி நிதியை பயன்படுத்தினர். ஆனாலும், 175 அரசு மருத்துவமனைகள் மட்டும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை பயன்படுத்துகின்றன. 97 அரசு மருத்துவமனைகளில் காப்பீட்டுத் திட்டம் இன்னும் பயன்படுத்தக் கூட ஆரம்பிக்கவில்லை.

கடந்த 6 ஆண்டுகளில் மொத்தம் ரூ.900 கோடி அளவுக்கு அரசு மருத்துவமனைகள் காப்பீட்டுத் திட்ட நிதியை பயன்படுத்தி சிகிச்சை மேற்கொண்டுள்ளன. தனியார் மருத்துவமனைகள், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை முடிந்த மட்டிலும் பயன்படுத்தி கொண்டனர். 2009-ல் ரூ.391 கோடியில் ஆரம்பித்து தனியார் மருத்துவமனைகள் ஒவ் வொரு ஆண்டும் அதிகரித்து கடந்த 2014-ல் ரூ.438 கோடிகள் என மொத் தம் இதுவரை ரூ.2500 கோடிகளுக்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.



பொதுமக்களிடம் விழிப்புணர்வு இல்லை

இதுகுறித்து ஆனந்தராஜ் மேலும் கூறியதாவது: மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் முக்கியத்துவத்தை கிராமப்புற ஏழை, எளிய மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழைகள் அனைவருக்கும், தமிழக முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டை கிடைக்கப் பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.

தற்போது ரூ. 150 கோடி பட்ஜெட்டில் மதுரையில் மல்டி ஸ்பெஷாலிட்டி அரசு மருத்துவமனையை ஹெலிகாப்டர் தளத்துடன் அரசு கட்டி வருகிறது. கடந்த 2009 முதல் தற்போது வரை ரூ. 2500 கோடிக்கு மருத்துவக் காப்பீட்டு நிதியை தனியார் மருத்துவமனைகள் பயன்படுத்தி உள்ளன.

தனியாருக்குச் சென்ற இந்த நிதியை நேரடியாக மக்களின் சுகாதாரத்துக்காக அரசே செலவிட்டு இருந்தால், மதுரை அதிநவீன மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை போல குறைந்தது 15 அரசு மருத்துவமனைகளை தமிழகம் முழுவதும் நிறுவி இருக்கலாம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x