

மதுரை ஸ்மார்ட் சிட்டி பணி களுக்காக வைகை ஆற்றின் பல் வேறு இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன. சித்திரைத் திருவிழாவுக்கு முன்பு இந்த பள்ளங்களை சீரமைத்து மூட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பக்தர்களிடையே எழுந்துள்ளது.
மதுரை சித்திரை திருவிழாவில் ஏப்ரல் 16-ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. கள்ளழகரை காண லட்சக்கணக்கான மக்கள் ஆற்றுக்குள்ளும், கரைகளிலும் திரள்வர். பெண்கள், குழந்தைகள் உட்பட குடும்பம், குடும்பமாக மக்கள் ஆற்றில் கள்ளழகரை வரவேற்பர். கள்ளழகருக்கு முடி காணிக்கை செலுத்துவதற்காகவும் ஏராளமானோர் கூடுவது வழக்கம்.
இந்நிலையில், மதுரை நகர்ப் பகுதியில் ஓடும் வைகை ஆற்றில் கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு கட்டுமானப் பணிகளுக்காக மண் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. அதனால், ஆற்றின் வழித்தடங் களில் பெரும் பள்ளங்கள் ஏற் பட்டுள்ளன. ஆற்றின் இரு கரைகளிலும் தடுப்புச் சுவர் கட்டும்போது ஏற்பட்ட பள்ளங் களையும் இன்னும் மூடவில்லை. கற்களும், கட்டிடக் கழிவுகளும் ஆங்காங்கே கொட்டப்பட்டுள்ளன.
இதனால் வைகை அணை யில் இருந்து சித்திரைத் திருவிழாவுக்காக ஆற்றில் தண்ணீர் திறக்கும்போது வழக் கம்போல் பக்தர்கள் ஆற்றுக்குள் திரண்டு நிற்பர்.
குறிப்பாக கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வில் உள்ளூர் பக்தர்களைவிட அருகிலுள்ள கிராம மக்கள் அதிகளவு வருவார்கள். ஆற்றில் ஏற்படுத்தப்பட்டுள்ள திடீர் பள்ளங்கள், தடுப்பணைகளின் அமைப்புகளை பற்றி அவர்கள் அறியாமல் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக சித்திரைத் திருவிழா நடக்காததால் இந்த ஆண்டு மக்கள் அதிகளவில் திரள வாய்ப்புள்ளது.
அதனால், மாநகராட்சி நிர்வா கமும், பொதுப்பணித்துறையும் இணைந்து ஆற்றில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ள பகுதிகளை ஆய்வு செய்து சித்திரைத் திருவிழாவுக்கு முன்பு சீரமைக்க வேண்டும் என் பதே பக்தர்களின் எதிர்பார்ப்பாகும்.