

அரியலூர்: நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படத்தில் ஒரு சமூகத்தினர் இழிவுபடுத்தப்பட்டதாக குற்றம்சாட்டிய பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர், இதற்காக நடிகர் சூர்யா மன்னிப்புக் கேட்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்நிலையில், சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை வெளியிடக் கூடாது என ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு திரையரங்க நிர்வாகிகளிடம் பாமக, வன்னியர் சங்கத்தினர் மனு அளித்தனர்.
இதையடுத்து, கடந்த 10-ம் தேதி தமிழகம் முழுவதும் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியான நிலையில், ஜெயங்கொண்டத்தில் திரைப்படம் வெளியாகவில்லை. இந்நிலையில், பாமக, வன்னியர் சங்கம் மற்றும் மாவீரன் மஞ்சள் படை உள்ளிட்ட அமைப்புகளிடம் திரையரங்க உரிமையாளர் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் நேற்று திரையரங்கில் போலீஸ் பாதுகாப்புடன் படம் திரையிடப்பட்டது.