Published : 13 Mar 2022 04:25 AM
Last Updated : 13 Mar 2022 04:25 AM

திமுக அரசு இளைஞர்களுக்கு எப்போதும் துணை நிற்கும்: எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை தொடங்கி வைத்து இளைஞர் களுக்கு பணிநியமன ஆணையை வழங்கிய சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின். அருகில், அமைச்சர்கள் காந்தி, கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், சட்டப்பேரவை உறுப்பினர் ஈஸ்வரப்பன் உள்ளிட்டோர். படம்: வி.எம்.மணிநாதன்.

ராணிப்பேட்டை

திமுக அரசு இளைஞர்களுக்கு எப்போதும் துணை நிற்கும் என சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

ராணிப்பேட்டை ஜி.கே.உலக பள்ளியில் தமிழக முதல்வரின் 69-வது பிறந்த நாளையொட்டி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடைபெற்றது. மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு பயிற்சித்துறை, ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் ஜி.கே உலக பள்ளி இணைந்து இதற்கான ஏற் பாட்டை செய்திருந்தனர்.

இந்த முகாமில், 150-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் மற்றும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலை தேடுபவர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சிக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் முகமது அஸ்லம் வரவேற்றார். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் வீர ராகவ ராவ் திட்ட விளக்கவுரை நிகழ்த்தினார்.

இதில், அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெகத் ரட்சகன் முன்னிலை வகித்துப் பேசும்போது, ‘‘மூலவராக ஸ்டாலின் இருக்க உற்சவராக உதயநிதி ஸ்டாலின் இருக்கிறார். அவர் இங்கு வேலை பெற்றவர்களுக்கு ஆணைகளை வழங்கவுள்ளார். ராஜ ராஜ சோழன் பரம்பரையில் இருந்து கொடுக்கின்ற கரங்களாக உள்ளார்’’ என்றார்.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச் சர் சி.வெ.கணேசன் வாழ்த்திப் பேசும்போது, ‘‘தமிழகத்தில் கடந்த 9 மாதங்களில் 34 தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றுள்ளது. இந்த 35-வது முகாம் போல் வேறு எங்கும் நடைபெறவில்லை. இளை ஞர்களின் திறன் மேம்பாட்டுக்காக ரூ.200 கோடியும், தொழிற்பயிற்சி நிலையங்களை மேம்படுத்த ரூ.2,500 கோடியும் முதல்வர் ஒதுக்கீடு செய்துள்ளார். ஒரு கல், ஒரு கண்ணாடியாக திமுக ஆட்சிக்கு வர காரணமாக இருந்தவர் உதயநிதி ஸ்டாலின். தமிழகத்தில் இனி எல்லா ஐடிஐ, பாலிடெக்னிக் கல்லூரிகளில் படித்தவர்கள் பட்டியல் தயாரித்து வேலை வழங்க நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது’’ என்றார்.

நிகழ்ச்சிக்கு அமைச்சர் ஆர்.காந்தி தலைமை தாங்கி பேசும்போது, ‘‘கடந்த 10 ஆண்டுகள் பின்தங்கிய தமிழகம் 10 மாதங்களில் மாறி விட்டது. மக்கள் ஸ்டாலின் மீது நம்பிக்கை வைத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற வைத்துள்ளனர். தமிழகம் முன்மாதிரி மாநிலமாக மாற்ற முதல்வர் ஸ்டாலின் இரவு, பகல் பார்க்காமல் உழைத்து வருகிறார்.

தளபதிக்கு பிறகு உதயநிதி

அண்ணாவுக்கு பிறகு சிறந்த ஆட்சியை கருணாநிதி கொடுத் தார். ஆனால், அண்ணாவும், கருணாநிதியும் இன்று இருந் திருந்தால் ஸ்டாலினை பாராட்டி இருக்கும் அளவுக்கு அவர்களின் எண்ணங்களை நிறைவேற்றி ஆட்சி செய்து வருகிறார். தாய் 8 அடி பாய்ந்தால், குட்டி 16 அடி பாயும் என்பார்கள். ஆனால், உயநிதி ஸ்டாலின் அதையெல்லாம் மிஞ்சிவிட்டார். எழுதி வைத் துக்கொள்ளுங்கள் தளபதிக்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின்தான்’’ என்றார்.

வேலைவாய்ப்பு முகாமில் தனியார் நிறுவனங்களுக்கு தேர்வான இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் வழங்கிப் பேசும்போது, ‘‘திமுக ஆட்சிப் பொறுப்பேற்று 9 மாதங்களாகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தில் பெரிய எழுச்சி கிடைத்தது. இந்த அரசின் செயல்பாட்டுக்காக 99 சதவீதம் வெற்றியை அளித் துள்ளார்கள். இதற்கெல்லாம் முதல்வர் ஸ்டாலின்தான் காரணம். மக்கள் பணியை முழு மூச்சாக செய்து வருகிறார். இந்த அரசு இளைஞர்களுக்கு எப்போதும் துணை நிற்கும்’’ என்றார்.

நிகழ்ச்சியில், ஆற்காடு எம்எல்ஏ ஈஸ்வரப்பன், ஜி.கே.உலக பள்ளி இயக்குநர் வினோத்காந்தி மற்றும் நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள், துணைத்தலைவர்கள் பங்கேற்ற னர். நிகழ்ச்சியின் முடிவில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லோகநாயகி நன்றி தெரிவித்தார்.

நேற்று நடந்த வேலை வாய்ப்பு முகாமில் மொத்தம் 26,641 பேர் பங்கேற்றனர். இதில், 4,022 பேர் பணி ஆணை பெற்றனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x