Published : 12 Apr 2016 02:23 PM
Last Updated : 12 Apr 2016 02:23 PM

விருதாச்சலம் சம்பவம்: ஜெயலலிதா மீது விஜயகாந்த் சரமாரி குற்றச்சாட்டு

மனித உரிமை பிரச்சனைகளில் தானாக தலையிடும் நீதிமன்றங்களும், ஜெயலலிதாவின் பிரச்சாரக் கூட்டத்தில் உயிரிழப்பு ஏற்பட்டது குறித்தும் உரிய நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் நேற்று (11.4.2016) நடைபெற்ற அதிமுகவின் தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா கலந்துகொண்டு பிரச்சார உரை வாசித்தார் என்பதை விட யாரோ ஒருவர் எழுதி கொடுத்ததை, கூட்டத்தில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் கூட படித்தார் என்றே சொல்லலாம்.

அப்போது கூட்ட நெரிசலில் சிக்கியும், சுட்டெரிக்கும் வெயிலை தாங்க முடியாமலும் சிதம்பரத்தைச் சேர்ந்த கருணாகரன் மற்றும் ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணனும் பரிதாபமாக உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டவர்கள் சுருண்டு விழுந்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி 50க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.

பாதிக்கப்பட்டவர்கள் தாமதமாக மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். கூட்டத்தில் சிக்கியவர்கள் உயிரிழந்தது அதிர்ச்சியையும் வேதனையும் அளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். படுகாயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இந்த கொடுமைகளுக்கு எல்லாம் முக்கிய காரணமாக விளங்குவது ஆளும் ஜெயலலிதாவும், அதிமுக ஆட்சியாளர்களும் தான் என்பது தெளிவாக விளங்குகிறது. ஜெயலலிதாவின் வசதிக்காக அரியலூர், பெரம்பலூர், கடலூர் ஆகிய 3 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஒரே இடத்திற்கு அழைத்து வரப்பட்டனர். கூட்டத்தில் பங்கேற்க வைப்பதற்கு என நூற்றுக்கணக்கான வாகனங்களில் ஆயிரக்கணக்கானோரை ஆளுங்கட்சியினர் காலை 9 மணியிலிருந்தே அழைத்து வந்து நிறுத்திவைத்துள்ளனர்.

கடும் கோடைக்காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலில் காலை முதல் மாலை வரை வெட்டவெளியில், இருக்கும்படி செய்ததால் பெண்களும், வயதானவர்களும் மட்டுமல்லாமல் இளைஞர்களும் சுருண்டு விழுந்தனர். தான் மட்டும் குளு, குளு ஏசியில் இருந்துகொண்டு மக்களை வெயிலின் கொடுமைக்கு ஆளாக்கிய இந்த அதிமுக அரசை தேமுதிக சார்பில் நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

இந்த மக்கள் ஜெயலலிதாவைக் காண்பதற்கு தானாக வந்தவர்கள் இல்லை, மாறாக மக்களின் வறுமையைப் பயன்படுத்தி அவர்களுக்கு ஐநூறோ, ஆயிரமோ கொடுத்து கூட்டிவந்து வெயிலின் கொடுமையில் அவர்களை பலிகொடுத்திருப்பது கண்டனத்திற்குரியது.

மேலும் காவல் துறையும், தேர்தல் ஆணையமும் கைகட்டி வேடிக்கை பார்த்ததோடு மட்டுமல்லாமல் ஆளும் ஆட்சியாளருக்கு ஆதரவாக இருந்து கொண்டு மக்களை உடனடியாக காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடாமல் இருந்தது மிகக் கொடுமையானது.

போதுமான குடிதண்ணீரும், முதல் உதவிக்காக ஆம்புலன்ஸ் வசதியும் செய்து தராமல் இந்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியினரின் செயல்பாடுகளை தீவிரமாகக் கண்காணித்து இயல்பான பணிகளைக் கூட செய்யவிடாமல் தடுக்கும் தேர்தல் ஆணையம், ஆளும் ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறதோ என்ற ஐயம் எழுந்துள்ளது.

மனித உரிமை பிரச்சனைகளில் தானாக தலையிடும் நீதிமன்றங்களும், ஜெயலலிதாவின் பிரச்சாரக் கூட்டத்தில் உயிரிழப்பு ஏற்பட்டது குறித்தும் உரிய நீதியை நிலைநாட்ட வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்.

தற்போது அறுவடை செய்யப்பட்ட விளைநிலத்தில் வெப்பம் அதிகமாக வெளியேறி தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற சிறிய அக்கறை இல்லாமல் கோடைக் காலத்தின் உச்சி வெயில் வேளையில் இந்த கூட்டத்தை கூட்டி மக்களை வாட்டியுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை கூடுதலாக உள்ளது என்ற உண்மையை ஆளுங்கட்சியினரின் மிரட்டலால் அரசு அதிகாரிகளும், காவல்துறையும் மறைத்து வருவதாக சொல்லப்படுகிறது.

ஜெயலலிதாவின் சீரற்ற நிர்வாகத்தாலும், ஆணவ அணுகுமுறையாலும் வெள்ளத்திலும், வெயிலின் கொடுமையிலும் மக்கள் சாகடிப்படுகின்றனர். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும்.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தாண்டில் மக்கள் நலன் போற்றும் புதிய ஆட்சி அமைந்து மக்கள் நலன் காக்கப்படும்'' என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x