Published : 12 Mar 2022 07:46 AM
Last Updated : 12 Mar 2022 07:46 AM

அரசு மருத்துவமனைகளில் இனி ஒப்பந்த முறை பணி நியமனம் இருக்காது: மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: அரசு மருத்துவமனையில் இனி ஒப்பந்த அடிப்படையில் இல்லாமல், நிரந்தர அடிப்படையில்தான் பணி நியமனம் இருக்கும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.14.5 கோடியில் தொடங்கப்பட்ட ஸ்டெம் செல் ஆராய்ச்சி மையம்,ரூ.2.44 கோடியில் ‘வாழ்வூட்டும்மருத்துவம் மற்றும் ஆராய்ச்சிதுறை’யாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த துறையை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். புதுப்பிக்கப்பட்ட கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை அரங்கத்தையும் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:

பழைய சோறு பற்றி ஆய்வு

ஸ்டான்லி மருத்துவமனையில் அதிநவீன வசதிகளுடன் வாழ்வூட்டும் மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி துறை புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த துறை சார்பாக ஏற்கெனவே 7 ஆராய்ச்சி கட்டுரைகள் உலகப்புகழ்பெற்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் பழைய சோறின் மகத்துவம் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக நடந்த ஆராய்ச்சியில், பழைய சோறு சாப்பிடுவதின் மூலம் குடல் அழற்சி போன்ற பல்வேறு நோய்கள் குணமடைந்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை அரங்கத்தில் முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக சிகிச்சைஅளிக்கப்படும்.

மருத்துவமனையில் காலிப் பணியிடங்களை நிரப்ப சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு பணிகள், தற்காலிக அடிப்படையில்தான் நிரப்பி இருக்கிறார்கள். இனி நியமிக்கப்படும் பணிகள் எல்லாம், ஒப்பந்த முறையில் இல்லாமல், நிரந்தர அடிப்படையில்தான் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் பாலாஜி, எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி மற்றும் மருத்துவர்கள் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x