Published : 12 Mar 2022 08:07 AM
Last Updated : 12 Mar 2022 08:07 AM

பள்ளிகளில் தொடரும் பாலியல் தொல்லை புகார்கள்; நீதியை நிலைநாட்ட எந்த எல்லைக்கும் செல்வோம்: கல்வி அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் கடும் எச்சரிக்கை

மதுரை: பள்ளிகளில் தொடரும் பாலியல் புகார்கள் மீதான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நீதியை நிலைநாட்ட எந்த எல்லைக்கும் செல்வோம் என கல்வித்துறை அதிகாரிகளை எச்சரித்துள்ளது.

மதுரை முனிச்சாலை ஜெயா ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜோசப் ஜெயசீலன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்தமனுவில், தங்கள் பள்ளி ஆசிரியைகள் இருவர் வேறு பள்ளிக்கு இடமாறுதல் செய்யப்பட்டதை ரத்து செய்யக் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவு: அரசு தரப்பில் கூறப்பட்ட விளக்கத்தில் ‘இரு ஆசிரியைகளுக்கும் மனுதாரர் தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்ததாக அவர்கள் புகார் அளித்தனர். இதன்அடிப்படையில் இடமாறுதல் செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது.

இரு ஆசிரியைகளும் மனுதாரரின் பாலியல் தொந்தரவு தொடர்பாக தனி மனு தாக்கல் செய்யதயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் அப்பள்ளியில் நியமனம் செய்யப்படும் பெண் ஆசிரியர்கள் பெரும்பாலானோர் மனுதாரர் மீது பாலியல் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளதாக அரசு தரப்பு தெரிவிக்கிறது.

இந்த வழக்கில் மனுதாரர் சம்பந்தப்பட்ட இரு ஆசிரியைகளையும் பள்ளியின் நடைமுறை பாதிக்காதவாறு பணியமர்த்த கோராமல், இருவரின் பணிமாறுதல் உத்தரவையும் ரத்து செய்யுமாறு கோரியதுடன், இரு ஆசிரியைகளையும் வழக்கில் எதிர் மனுதாரராகவும் சேர்த்துள்ளார். எந்த அடிப்படையில் மனுதாரர் இவ்வாறு செய்தார் என்ற கேள்வி எழுகிறது.

அதிர்ச்சி அளிக்கும் சம்பவங்கள்

இருப்பினும், இதுபோன்ற செயல்பாடுகளை நீதிமன்றம் பொறுத்துக் கொள்ளாது. கல்வி நிறுவனங்களில் தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டுகள் வருவது அதிர்ச்சி அளிக்கிறது. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால், பாலியல் தொல்லை தருவோர் தப்பி வருகின்றனர். நீதியை நிலைநாட்ட நீதிமன்றம் எந்த எல்லைக்கும் செல்லும்.

மனுதாரரால் பாதிக்கப்பட்ட 2 பெண் ஆசிரியைகளும், கல்வித்துறை அதிகாரிகளுக்கு அனுப்பிய புகார் அடிப்படையில், கீரைத்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து உடனடியாக விசாரணையைத் தொடங்க வேண்டும்.

ஆசிரியைகள் இருவரும் இடமாறுதல் செய்யப்பட்ட பள்ளியில் பணியில் சேர வேண்டும். இருவரின் பணி பதிவேடுகளையும் வழக்கு முடியும் வரை கல்வி அலுவலர் தனது பொறுப்பில் வைத்திருக்க வேண்டும்.

பெண் ஆசிரியைகளுக்கும் எதிரான பாலியல் புகார்களை விசாரிக்க, மாவட்ட கல்வி அலுவலர் தனிக் குழுவை அமைக்க வேண்டும். கீரைத்துறை போலீஸார் விசாரணை அறிக்கையை மார்ச் 14-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x