இன்டேன் சிலிண்டருக்கு டிஜிட்டல் ரசீது: இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு

இன்டேன் சிலிண்டருக்கு டிஜிட்டல் ரசீது: இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு
Updated on
1 min read

கோவை: இந்தியன் ஆயில் நிறுவன தென் மண்டல தலைமை பொது மேலாளர் (பெருநிறுவன தொடர்பு) வி.வெற்றி செல்வக்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

கோவையில் இன்டேன் சமையல் எரிவாயு வாடிக்கையாளர்கள் தங்களது எரிவாயு உருளையைப் பெறும்போது காகித ரசீதுகளை பெற்று வருகின்றனர். இனி, டிஜிட்டல் முறையில் ரசீது வழங்கப்படும். கடந்த 10-ம் தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பசுமையை நோக்கி செல்வோம் என்ற முயற்சியில் காகித பயன்பாட்டை குறைக்கும் நோக்கில் அறிமுகம் செய்யப்படும் இந்த புதிய நடைமுறை கோவை, சண்டிகர், ராஞ்சி மற்றும் சூரத் நகரங்களில் அமலுக்கு வந்துள்ளது. ரசீதுகளை வாடிக்கையாளர்கள் தங்களது பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணுக்கான குறுஞ்செய்திகள் வழியாகவும் அல்லது https://cx.indianoil.in என்ற இணையத்திலும் சென்று பார்வையிடலாம். இருப்பினும் வாடிக்கையாளர்கள் எரிவாயு உருளை வழங்குபவரிடம் சிலிண்டருக்கான தொகையை அறிந்துகொண்டு பணம் அளிக்கலாம்.

அதோடு வாடிக்கையாளர்கள் வழக்கமான ரசீதுகளை பெற விரும்பினால், ‘இந்தியன் ஆயில் ஒன் ஆப்’ எனும் செயலி அல்லது தங்களது எரிவாயு விநியோகஸ்தரிடம் விருப்பத்தை தெரிவித்து பெறலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in