

நமக்கு நாமே திட்டத்தின் கீழ், ஈரோடு மாநகராட்சியில் பல்வேறு பணிகளை மேற்கொள்ள பொதுமக்கள் ரூ.30 லட்சம் பங்களிப்புத் தொகை அளித்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழக அரசின் நமக்கு நாமே திட்டத்தின் மூலம், ஈரோடு மாநகராட்சிப் பகுதிகளில், நீர்நிலை புனரமைத்தல், பூங்கா மற்றும் விளையாட்டுத் திடல் மேம்பாடு செய்தல், தெருவிளக்கு, நீரூற்றுகள் மற்றும் போக்குவரத்து ரவுண்டானாக்கள் அமைத்தல், மின் சிக்கன தெருவிளக்குகள், தேவையான இடங்களில் சூரியசக்தி உயர் கோபுர மின் விளக்குகள் அமைத்தல் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் அழைப்பு விடுத்தது.
இந்த திட்டத்தில் பங்கேற்க விரும்பும் அமைப்பினர், குடியிருப்போர் நலச் சங்கங்கள் தங்களது பகுதியில் மேற்கொள்ள வேண்டிய திட்டம் குறித்தும், அதில் தங்களது பங்களிப்பு குறித்தும் மாநகராட்சிக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதனை மாநகராட்சி நிர்வாகம் பரிசீலனை செய்து, மதிப்பீடுகளைத் தயார் செய்யும். இதில் 50 சதவீதம் தொகையை பொதுமக்கள் பங்களிப்பு செய்ய முன்வந்தால், மீதமுள்ள தொகையை மாநகராட்சி ஒதுக்கி, திட்டம் நிறைவேற்றப்படும்.
இத்திட்டம் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
ஈரோடு மாநகராட்சியில் நமக்கு நாமே திட்டம் குறித்து பொதுமக்களிடம் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் கழிவுநீர் மேம்பாடு, கண்காணிப்பு கேமரா பொருத்துதல் உள்ளிட்ட 10 பணிகளை மேற்கொள்ள பொதுமக்கள் விருப்பம் தெரிவித்து, ரூ.30 லட்சம் பங்களிப்புத் தொகையாக அளித்துள்ளனர். இந்த பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி நிதி ஒதுக்கீடு செய்தவுடன் பணிகள் விரைவாக நடைபெறும், என்றனர்.