

ஈரோடு மாவட்டம் சென்னிமலை - அறச்சலூர் சாலையில் மின்வாரிய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் தமிழக அரசின் இலவச மின்சார திட்டத்தின் கீழ், மின் இணைப்பு பெறுவதற்கு விண்ணப்பிக்கும் விவசாயிகளிடம் லஞ்சம் கேட்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதையடுத்து சென்னிமலை பேருந்து நிலையம் அருகே ஐக்கிய விவசாயிகள் முன்னணி மற்றும் அனைத்து மக்கள் நல அமைப்புகள் சார்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மின் இணைப்புக்கு லஞ்சம் கேட்கும் அதிகாரிகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதனிடையே சென்னிமலை மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரியும் குற்றச்சாட்டுக்குள்ளான அதிகாரி பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்மீது விசாரணை நடந்து வருவதாகவும் மின்வாரிய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.