

சென்னை: பெண்கள் பொருளாதாரத்தில் அதிகாரம் பெறுவது முக்கியம் என்று தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவன் வளாகத்தில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. பத்திரிகை தகவல் அலுவலகம் மற்றும் மண்டல மக்கள் தொடர்பு அலுவலக கூடுதல் தலைமை இயக்குநர் எம்.அண்ணாதுரை வரவேற்றார்.
தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, மகளிர் தினக் கருத்தரங்கை தொடங்கிவைத்தார். மேலும், பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடினார். அப்போது, அவர் பேசியதாவது:
பெண்கள் தங்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்களை வெளிப்படுத்த இயலாத நிலை உள்ளது. இதற்குக் காரணம், அவர்கள் மற்றவர்களை சார்ந்திருப்பதுதான். எனவே, பெண்கள் பொருளாதாரத்தில் அதிகாரம் பெற வேண்டும்.
இதைக் கருத்தில் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு முத்ரா திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் பெண்கள் தொழில் தொடங்க முன்னுரிமை அளித்துள்ளது. உஜ்வாலா திட்டத்தில் சமையல் எரிவாயு இணைப்பையும், பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தில் வீட்டின் உரிமையையும் பெண்களுக்கு அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பெண்கள் உடையில் கட்டுப்பாடு இருக்க வேண்டும். பெண்களுக்கு மட்டுமே சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன. ஆண்களுக்கும் கட்டுப்பாடுகள் இருந்தால்தான் பெண்களிடம் சரியாக நடந்து கொள்வார்கள்.
பெண்ணுரிமை எது என்பதில்தான் பிரச்சினை ஏற்படுகிறது. நாகரிக உடைகள் உடுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். மற்றவர்கள் முகம் சுளிக்கும் வகையில் உடை அணியக்கூடாது. உடையில் கட்டுப்பாடு இருக்க வேண்டும்.
பெண்கள் தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு அஞ்சி உயிரை மாய்த்துக் கொள்வது தவறான முடிவு. பெண்கள் பிரச்சினைகளை தைரியமான முறையில் எதிர்த்து, போராட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்தக் கருத்தரங்கில், காவல் துறை துணை ஆணையர் சி.ஷியாமளாதேவி, நடிகையும், திரைப்படத் தயாரிப்பாளருமான குட்டிபத்மினி, எழுத்தாளர் கீதா இளங்கோவன் ஆகியோர் பேசினர். பத்திரிகை தகவல் அலுவலகம் மற்றும் மண்டல மக்கள் தொடர்பு அலுவலக இயக்குநர் குருபாபு பலராமன் நன்றி கூறினார்.