

சென்னை அம்பத்தூரில் இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட தலைவரை அவரது அலுவல கத்துக்கு எதிரிலேயே மர்ம ஆசாமிகள் அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன், கொலையாளிகள் அடையாளம் தெரிந்துள்ளது.
சென்னை அம்பத்தூர் அருகே மண்ணூர்பேட்டை மலையத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (48). திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவர். இவரது அலுவலகம் அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் உதவி மையம் அருகே சி.டி.எச் சாலையில் உள்ளது.
போனில் அழைத்துக் கொலை
புதன்கிழமை இரவு 10 மணி அளவில் அவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. செல்போனில் பேசியபடி அலுவலகத்தை விட்டு வெளியே வந்தார் சுரேஷ்குமார். அப்போது 2 பைக்குகளில் வந்த 3 பேர் அரிவாள், கத்தியால் அவரை சரமாரியாக வெட்டினர். தடுக்க முயன்ற அலுவலக உதவியாளர் ரவிக்கும் (30) வெட்டு விழுந்தது. சத்தம் கேட்டு, அருகே உள்ள போலீஸ் இணை கமிஷனர் அலுவலகத்தில் இருந்து காவலர் கள் ஓடிவருவதற்குள் மர்ம ஆசாமிகள் தப்பினர்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த சுரேஷ்குமார் மற்றும் காயமடைந்த ரவியை போலீஸார் ஆட்டோவில் ஏற்றி அண்ணா நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சுரேஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். ரவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதற்கிடையில், தகவல் அறிந்து ஏராளமானோர் மருத்துவமனை முன்பு குவிந்தனர். சாலை மறியலிலும் ஈடுபட்டனர். காவல் துறை அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தி சுரேஷ்குமார் உடலை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
முன்விரோதம் காரணமா?
இந்து முன்னணி இயக்கப் பணிகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இயக்கத்துக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி யுள்ளார். சொந்தமாக வேன் வைத்துள்ள சுரேஷ்குமார், அதில் மாணவ, மாணவிகளை பள்ளிக்கு அழைத்துச்சென்றுவந்தார். முன்விரோதத்தில் கொலை நடந்ததா, வேறு காரணமா என போலீஸார் விசாரித்து வருகின்றனர். சுரேஷ்குமாருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனர். இவர்களது சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் கக்கோடு கிராமம்.
கொலையாளிகள் யார்?
கொலையாளிகளை நேரில் பார்த்த ஒரே சாட்சி ரவி என்பதால் மருத்துவமனையில் அவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவர் கூறிய அடையாளங்களை வைத்து, கொலையாளிகள் ஒரு குறிப்பிட்ட பிரிவை சேர்ந்தவர்கள் என்பதை காவல் துறையினர் உறுதிசெய்துள்ளனர்.
சிசிடிவியில் பதிவானது
கொலையாளிகள் பைக்கில் வந்ததாக அவர் கூறியதால் சி.டி.எச். சாலை, போலீஸ் இணை ஆணையர் அலுவலகம் மற்றும் சில தனியார் நிறுவனங்களுக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை காவல் துறையினர் ஆய்வு செய்தனர். அதில் 2 பைக்குகளில் 3 பேர் அரிவாளுடன் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. அந்த காட்சிகளை ரவியிடம் போட்டுக் காட்டி அவர்கள்தான் கொலையாளிகள் என்பதையும் போலீஸார் உறுதி செய்துள்ளனர்.
அடையாளம் தெரிந்துகொள் வதற்காக, சுரேஷ்குமாரை செல்போனில் அழைத்து வெளியே வரச்செய்து கொலை செய்துள்ளனர் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. அவருக்கு வந்த செல்போன் அழைப்புகள் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீஸார், சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்துள்ளனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
தொடர் கொலைகள்
கடந்த சில ஆண்டுகளில் தமிழ கத்தின் பல்வேறு பகுதிகளிலும் குமார பாண்டியன் சகோதரர்கள் மூவர், புகழேந்தி, மருத்துவர் அரவிந்த் ரெட்டி, வெள்ளையப்பன், குட்டநம்பு, ஆடிட்டர் ரமேஷ் என இந்து அமைப்பு தலைவர்கள் பலர் கொடூரமாக வெட்டி கொல்லப்பட்டுள்ளனர். அதுபோலவே சுரேஷ்குமாரும் கொல்லப்பட்டுள்ளதால் பழைய சம்பவங்களில் தொடர்புடைய வர்களே இதிலும் ஈடுபட்டிருக் கலாம் என்று போலீஸார் சந்தேகிக் கின்றனர். அந்த கோணத்திலும் விசாரணை நடக்கிறது.
வன்முறை: வாகனங்கள் உடைப்பு
சுரேஷ்குமார் உடல் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, அம்பத்தூர் மண்ணூர்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு வியாழக்கிழமை பிற்பகல் ஆம்புலன்ஸில் கொண்டுசெல்லப்பட்டது. வழிநெடுகிலும் பல இடங்களிலும் இந்து முன்னணி தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை முன்பு தொண்டர்கள் மறியல் செய்ததால் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் 3 மணி நேரம் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மருத்துவமனையில் வேறொரு பிரிவைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை தொண்டர்கள் தாக்கினர். அவரை போலீஸார் பாதுகாப்பாக மீட்டனர்.
அமைந்தகரை, அண்ணாநகர், திருமங்கலம், வில்லிவாக்கம், கொரட்டூர் போன்ற பகுதிகளில் 13 மாநகர பேருந்துகளின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. திருமங்கலம், கொரட்டூர், அம்பத்தூர் பகுதிகளில் திறந்திருந்த கடைகள், கல் வீசித் தாக்கப்பட்டன. டி.பி.சத்திரம் பகுதியில் ஒரு கார் ஷோரூம் மற்றும் அமைந்தகரையில் ஒரு தேவாலயத்தின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதில் 4 பேர் காயம் அடைந்தனர். அம்பத்தூரில் ஒரு இறைச்சி கடைக்குள் புகுந்து உரித்து வைத்திருந்த கோழிக்கறிகளை எடுத்து சாலையில் வீசினர். நியூ ஆவடி சாலையில் 7 கார்கள், 2 லாரிகளை அடித்து உடைத்தனர். கண்ணில் பட்ட சிலரை தொண்டர்கள் சரமாரியாக தாக்கினர். போலீஸார் தடியடி நடத்தி அவர்களை விரட்டினர். சுரேஷ்குமாரின் வீடு இருக்கும் மண்ணூர்பேட்டை, அம்பத்தூர் பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.