

அழியும் நிலையிலுள்ள பறவை இனம் என, பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ள அரியவகை வெண்கழுத்து நாரை (Woolly necked stork) பறவைகள் திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரி ஐஎஸ்ஆர்ஓ வளாகத்தில் காணப்படுகிறது.
இதுகுறித்து திருநெல்வேலி உதவி வனபாதுகாவலர் ஹேமலதா கூறியதாவது:
பணகுடி அருகே மகேந்திரகிரி யிலுள்ள ஐஎஸ்ஆர்ஓ மையத்தின் உள்ளே காட்டுப்பகுதியில் அரிய வகை பறவை இனமான வெண்கழுத்து நாரையை பார்த்து ஆச்சரியமடைந்தேன். வெகுதூரத்திலிருந்து அவற்றை புகைப்படம் எடுத்துக்கொண்டேன். இந்த வெண்கழுத்து நாரை பறவையினம், பன்னாட்டு அளவில் அழிந்து வரும் விளிம்பு நிலையில் இருப்பதாக பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் அறிவித்திருக்கிறது.
வெளி நாடுகளிலும், இந்தியாவில் மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களிலும் காடுகளில் மிகக்குறைந்த அளவில் இவை காணப்படுகின்றன. தமிழகத்தில் அரியலூர் மாவட்ட பகுதிகளில் தென்பட்டிருக்கிறது. சமீபத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த பறவைகள் தென்பட்டன. தற்போது இஸ்ரோ வளாகத்தினுள் உள்ள காட்டுப்பகுதியில் காண முடிந்தது.
இவை அடர்ந்த காடுகளில் மிகவும் உட்பகுதிகளில் காணப்படும். மனிதர்கள் வசிக்கும் பகுதிகளில் இருந்து வெகு தொலைவில் தள்ளியே இவைகள் வசிக்கும். பெரும்பாலும் புல்வெளி பகுதிகள் மற்றும் ஈரநிலம் நெல்வயல் பகுதிகளில் இவைகள் இரைகளை தேடும். கடற்கரை மற்றும் உவர் நிலங்களில் அதிகம் தென்படுவதில்லை. ஆனால் இஸ்ரோ பகுதியில் காய்ந்த முள்காடு பகுதிகளில் தென்படுவது ஆச்சரியமாக இருக்கிறது . இப்பகுதியில் இவை கூடு கட்டி வாழக்கூடும் என்று தெரிவித்தார்.