Published : 17 Jun 2014 08:36 AM
Last Updated : 17 Jun 2014 08:36 AM

பரபரப்பான அந்த 13 நிமிடங்கள்..

அரசு மருத்துவமனையில் இருந்து புறப்பட்ட ஆம்புலன்ஸ், கோட்டை ரயில் நிலையம், தீவுத்திடல், போர் வீரர்கள் நினைவுச் சின்னம், நேப்பியர் பாலம், உழைப்பாளர் சிலை, கண்ணகி சிலை, காந்தி சிலை, கலங்கரை விளக்கம், சாந்தோம், பட்டினப்பாக்கம், சத்யா ஸ்டுடியோ ஆகிய 11 சிக்னல்களையும், வழியில் இருந்த 6 வேகத்தடைகளையும் கடந்து தனியார் மருத்துவமனையை அடைந்தது. இந்த வழித்தடத்தின் தூரம் 6.5 கி.மீ. இந்த தூரத்தை கடக்க எடுத்துக்கொண்ட நேரம் 13 நிமிடங்கள், 22 விநாடிகள்.

மாலை 6.44 மணிக்கு புறப்பட்ட ஆம்புலன்ஸ் சரியாக 6.57 மணிக்கு அடையாறு மருத்துவமனையை வந்தடைந்தது. மதியம் 3 மணிக்கே போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டது. இதனால் மாலையில் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த நேரத்தில் பிரச்சினை ஏதும் ஏற்படவில்லை.

ஆம்புலன்ஸ் வாகனம் முன்னால் சென்ற போலீஸ் வாகனத்தை காவலர் பாலாஜி ஓட்டி சென்றார். ஆய்வாளர் செல்வராஜ், உதவி ஆய்வாளர் சந்திரசேகரன் ஆகியோர் போலீஸ் வாகனத்தில் அமர்ந்து போக்குவரத்து தகவல்களை கேட்டு வழிநடத்திச் சென்றனர்.

அரசு மருத்துவமனையில் இருந்து அடையாறு தனியார் மருத்துவமனை வரை இருந்த 11 சிக்னல்களும் ஆம்புலன்ஸ் செல்லும்போது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு சிக்னலிலும் வயர்லஸ் கருவியுடன் போலீஸார் தொடர்பில் இருந்து ஆம்புலன்ஸ் வரும் செய்தியறிந்து போக்குவரத்தை சரிசெய்தனர். ஆம்புலன்ஸ் செல்லும்போது இணைப்பு சாலைகளில் இருந்து யாரும் குறுக்கே வந்துவிடக் கூடாது என்பதற்காக அந்த இடங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப் பட்டிருந்தது. போக்குவரத்தை முழுவதும் நிறுத்தி பொதுமக்களை பாதிக்காமல், சாலையின் ஓரத்தில் மற்ற வாகனங்கள் செல்ல சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் 220 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டனர்.

போக்குவரத்தில் மாற்றம் செய்தபோது யாரோ முக்கியத் தலைவர்கள் வரப்போகிறார்கள் என்று நினைத்த மக்கள், ஆம்புலன்ஸ் செல்வதற்காகத்தான் காவல்துறையினர் இந்த நடவடிக்கையில் இறங்கியிருப்பதை அறிந்து அவர்களுக்கு பெரிதும் பாராட்டு தெரிவித்தனர்.

இந்த பயணத்தை சென்னை காவல் ஆணையர் ஜார்ஜ், போக்குவரத்து கூடுதல் ஆணையர் கருணாசாகர் மற்றும் உயர் அதிகாரிகள் தங்கள் அறையில் இருந்து வீடியோ காட்சிகள் மூலம் ஆம்புலன்ஸ் பயணம் செய்வதைப் பார்வையிட்டனர்.

ஆம்புலன்ஸ் ஓட்டுநர் நெகிழ்ச்சி

அரசு பொது மருத்துவமனையில் இருந்து கடற்கரை சாலை வழியாக அடையாறு ஃபோர்டிஸ் மருத்துவமனைக்கு 13.22 நிமிடங்களில் ஆம்புலன்ஸை ஓட்டிவந்தார் ஓட்டுநர் கதிர். அவர் வந்தவுடன் மருத்துவமனையில் குழுமியிருந்த மக்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘சுமார் 90 முதல் 100 கி.மீட்டர் வேகத்தில் வண்டியை ஓட்டினேன். இதற்கு போக்குவரத்து போலீஸும், மருத்துவமனையும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். இதனால், திட்டமிட்ட நேரத்தைவிட, முன்னதாகவே வந்தடைய முடிந்தது. உயிரை காப்பாற்றுவதற்கு நானும் உதவியாக இருந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது’’ என்றார்.

போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், எஸ்.ஐ சந்திரசேகரன் ஆகியோர் கூறுகையில், ‘‘மாற்று இதய அறுவை சிகிச்சை தகவல் கிடைத்ததையடுத்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் சரியான வகையில் திட்டமிட்டு செய்தோம். சிக்னல்களில் கூடுதல் போக்குவரத்து போலீஸாரை பணியில் அமர்த்தினோம். இதயத்தை பாதுகாப்பாக எடுத்து செல்வது தொடர்பாக டாக்டர்கள் கூறிய அறிவுரையின்படி செயல்பட்டோம். இதில் நாங்கள் பணியாற்றியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது’’ என்றனர்.

வேலூருக்கு சென்றது கல்லீரல்...

லோகநாதனின் உடலில் இருந்து சிறுநீரகங்கள், கல்லீரல், இதயம் ஆகியவை வரிசையாக அகற்றப்பட்டன. இறுதியாக கண்கள் அறுவைச் சிகிச்சை செய்து எடுக்கப்பட்டன. இதில் 6-ல் இருந்து 8 மணி நேரத்துக்குள் பொருத்தப்படவேண்டிய கல்லீரல், வேலூர் சிஎம்சி மருத்துவ மனைக்கு ஆம்புலன்சில் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.

இரு சிறுநீரகங்களும், இதயம் அனுப்பப்பட்ட சென்னை ஃபோர்டிஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. அவை இரு நபர்களுக்கு, 12 மணி நேரத்துக்குள் பொருத்தப்படும். லோகநாதனின் கண்கள், அரசு கண் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டன. தோல், தீக்காயம் ஏற்பட்டவர்களுக்காக கீழ்ப்பாக்கம் ரைட் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சுமார் 6 ஆண்டுகளுக்கு முன்பு திருக்கழுக்குன்றத்தை சேர்ந்த சிறுவன் ஹிதேந்திரன் இதேபோல் விபத்தில் சிக்கி, சென்னை அப்பல்லோ மருத்து வமனையில் சேர்க்கப்பட்ட பிறகு அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. அவரது உடல் உறுப்புக்களை பெற்றோர் தானமாக கொடுத்தனர். இதைத் தொடர்ந்து, போக்கு வரத்தை முழுவதுமாக நிறுத்த ஏற்பாடு செய்த போலீஸார், சில நிமிடங்களில் முகப்பேரில் உள்ள செரியன் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உதவினர். அங்கு ஒரு பெண்ணுக்கு வெற்றிகரமாக இதயம் பொருத்தப்பட்டது. அந்நிகழ்வு, உடல் உறுப்பு தானத்தைப் பற்றிய பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிகழ்வும், அதைப் போலவே சென்னை நகரில் அனைவரது கவனத்தையும் ஈர்ப்பதாக அமைந்தது. தமிழகத்தில் உள்ள உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்யும் மருத்துவமனைகள், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இயங்கும் தமிழ்நாடு அரசு மூளைச்சாவு உறுப்பு மாற்றுச் சிகிச்சைத் திட்டத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். அவ்வாறு ஏற்கெனவே பல்வேறு உறுப்புகளைக் கோரி பதிவு செய்திருந்த மருத்துவமனை நிர்வாகத்தினரை, லோகநாதனின் நிலை பற்றி கூறி உறுப்புகளைப் பெற்றுக் கொள்ளும்படி அரசு மருத்துவர்கள் தகவல் அனுப்பினர்.

இதைத் தொடர்ந்து லோகநாதனின் இதயம், கல்லீரல், இரு சிறுநீரகங்கள், இரு கண்கள் மற்றும் தோல் ஆகியவை தேவைப்படுவதாக வேலூர், சென்னை உள்பட பல்வேறு மருத்துவமனைகளில் இருந்து தகவல் கிடைத்தது.

மும்பை பெண் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படாதது ஏன்?

அரசு மருத்துவமனைக்கும், தனியார் மருத்துவமனைக்கும் ஆபரேஷன் தியேட்டர் மாறுபடும். மருத்துவக் கருவிகளிலும் வித்தியாசம் இருக்கும். மேலும் ஆபரேஷனுக்கு பின்னர் அனுமதிக்கப்படும் வார்டும் முற்றிலும் வேறுமாதிரியாக இருக்கும். தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர்களால், அரசு மருத்துவமனை ஆபரேஷன் தியேட்டரிலும் மற்றும் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர்களால் தனியார் மருத்துவமனை ஆபரேஷன் தியேட்டரிலும் இதய மாற்று அறுவைச் சிகிச்சை செய்வது கடினம். அதனால்தான் அரசு மருத்துவமனையில் இருந்து லோகநாதனின் இதயம், அடையார் ஃபோர்டிஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெறும் இளம் பெண்ணுக்கு பொருத்தப்பட்டதாக டாக்டர் ஒருவர் தெரிவித்தார்.

தாயார் ராஜலட்சுமி கண்ணீர்

அப்பா இல்லாத ஒரே மகனை மிகவும் பாசத்துடன் வளர்த்தேன். ரயில்வே வேலைக்கு போவதையே லட்சியமாக கொண்டு இருந்தார். வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றுவான் என நினைத்து இருந்தேன். ஆனால் மகன் என்னைவிட்டு போய்விட்டான். மகன் பிழைக்க மாட்டான் என டாக்டர்கள் சொன்னதால், மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய சம்மதித்தேன். என் மகன் இறந்தாலும், அவனது உடல் உறுப்புகள் மூலம் பல பேரின் உயிரை காப்பாற்றி இருக்கிறான் என்பதை நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது எனக் கூறி கண்ணீர் விட்டு அழுதார் ராஜலட்சுமி.

ஹிதேந்திரன் முன் உதாரணம்..

சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த ஹிதேந்திரன் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. இதையடுத்து தமிழ்நாடு அரசு மூளைச்சாவு உறுப்பு மாற்றுசிகிச்சை திட்டம் 2008-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக டாக்டர் அமலோற்பவநாதன் நியமிக்கப்பட்டார். இத்திட்டத்தின் மூலம் இதுவரையில் உறுப்பு தானம் செய்தவர்களின் விவரம்:

உறுப்பு தானம் செய்தவர்கள் - 482

இதயம் - 76

நுரையீரல் - 440

சிறுநீரகம் - 861

கணையம் 1

இருதய வால்வு 500

கண் விழித்திரை 730

தோல் 4

மொத்தம் 2649

இதுதொடர்பாக டாக்டர் அமலோற்பவநாதன் கூறிய தாவது:

இந்தியாவிலேயே உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. மற்ற மாநிலங்களைவிட, தமிழகத்தில் 10 சதவீதம் கூடுதலாக உடல் உறுப்புகள் தானம் செய்யப்படுகிறது. இதுவரை மூளைச்சாவு அடைந்த 482 பேர் உடல் உறுப்பு தானம் செய்துள்ளனர். தற்போது உடல் உறுப்பு தானம் செய்துள்ள லோகநாதன் 483-வது நபர். உடல் உறுப்பு தானம் 90 சதவீதம் வெற்றி அடைந்துள்ளது.

பெரும்பாலானோர் மூளைச் சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகளை தாமாகவே தானம் செய்ய முன்வருகின்றனர். மற்றவர்களிடம் நாங்கள் பேசி, உடல் உறுப்புகளை தானம் செய்யும்படி கூறுகி றோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x