Published : 20 Apr 2016 07:54 AM
Last Updated : 20 Apr 2016 07:54 AM

நடைபயணம் முதல் தெருமுனை கூட்டம் வரை: தியாகராய நகரில் அனல் பறக்கும் பிரச்சாரம்

சென்னை தியாகராய நகர் தொகுதியில் அதிகாலை நடைபயணத்தில் தொடங்கி, இரவு தெருமுனைக் கூட்டங்கள் வரை அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.

சென்னை மாநகரின் மிக முக்கியமான வர்த்தகப் பகுதியான தியாகராய நகர் தொகுதியில் அதிமுக, திமுக, பாஜக, தேமுதிக, பாமக என 5 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி சார்பில் பத்மநாபன் என்பவரும் களத்தில் உள்ளார்.

மிகப்பெரிய வணிக நிறுவனங்கள், கடைகள் நிறைந்திருக்கும் இத்தொகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் மிக அதிகமாக இருக்கின்றன. கோடை காலம் என்பதால் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் அதி காலை நடைபயிற்சியோடு பிரச்சாரத்தை தொடங்கி 11 மணிக்குள் முடித்துவிடுகின் றனர். பகல் நேரத்தில் கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் சந்தித்து வருகின்றனர்.

மாலை 4 மணிக்கு மீண்டும் பிரச்சாரத்தை தொடங்கும் வேட்பாளர்கள் கடைகள், மார்க்கெட் பகுதிகளில் வாக்காளர்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரிக்கின்றனர். 5 மணிக்குப் பிறகு வீடு, வீடாகச் சென்று துண்டுப் பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிக்கின்றனர். இரவு 8 மணிக்கு மேல் 10 மணிக்குள் தொகுதிக்குட்பட்ட 2 அல்லது 3 இடங்களில் தெருமுனை கூட்டங்களில் பேசுகின்றனர். கடந்த சில நாள்களாக தியாகராய நகரில் இந்தக் காட்சிகளைத்தான் காண முடிகிறது.

வணிகர்களை குறிவைக்கும் அதிமுக

தியாகராய நகர் தொகுதியில் அதிமுக சார்பில் அக்கட்சியின் தென்சென்னை வடக்கு மாவட்டச் செயலாளரும், சென்னை மாநகராட்சி கவுன்சிலருமான பி.சத்தியநாராயணன் போட்டியிடுகிறார். கடந்த 2006, 2011 இரு தேர்தல்களில் தொடர்ந்து அதிமுக வென்ற தொகுதி என்பதால் அவர் நம்பிக்கையுடன் பிரச்சாரம் செய்து வருகிறார்.

நேற்று காலை 6 மணிக்கு வடபழனியில் உள்ள மாநகராட்சி பூங்காக்களில் நடைபயிற்சிக்கு வந்தவர்களிடம் வாக்கு சேகரித்தார். அதிமுக அரசின் சாதனைகளை விளக்கும் துண்டுப் பிரசுரங்களை வழங்கினார்.

பின்னர் நேற்று பகல் 11 மணி வரை வடபழனி மார்க்கெட் பகுதிகளில் உள்ள ஒவ்வொரு கடைகளுக்கும் சென்று வாக்கு சேகரித்தார். அவருடன் அப்பகுதி அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் உடன் சென்றனர். வணிகர்கள், நடுத்தர, மற்றும் அடித்தட்டு மக்களை குறிவைத்து அவர் பிரச்சாரம் செய்து வருகிறார்.

ஆதரவு திரட்டும் திமுக வேட்பாளர்

திமுக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் என்.வி.என். சோமுவின் மகள் டாக்டர் கனிமொழி போட்டியிடுகிறார். முறைப்படியான தேர்தல் பிரச்சாரத்தை அவர் தொடங்கவில்லை.

நேற்று காலை 6 மணி முதல் தொகுதி முழுவதும் உள்ள திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். மாலை நேரங்களில் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.

இது தொடர்பாக தி இந்துவிடம் பேசிய கனிமொழி, ‘‘தொகுதி முழுவதும் கட்சி செயல்வீரர்கள் கூட்டங்களை நடத்தி வருகிறேன். வட்டச் செயலாளர்கள் முதல் அனைத்து கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகளை நேரில் சந்தித்து வருகிறேன். புதன்கிழமை (இன்று) தொகுதி முழுவதுக்குமான செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறுகிறது. அதன் பிறகு வீடு, வீடாகச் சென்று மக்களைச் சந்திக்க இருக்கிறேன்’’ என்றார்.

பிராமணர் வாக்குகளை நம்பும் பாஜக

பாஜக சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா, கடந்த மார்ச் 25-ம் தேதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதல் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பிராமண சமுதாயத்தினர் அதிகம் உள்ள தொகுதி என்பதால் அதிகாலை நடைபயற்சியோடு பிரச்சாரத்தை தொடங்குகிறார்.

நேற்று காலை 7 மணிக்கு மேற்கு மாம்பலம் துரைசாமி பாலம் அருகே உள்ள பிருந்தாவனம் தெருவில் இருந்து நடைபயணமாக சென்று காலை 11 மணி வரை அவர் பிரச்சாரம் செய்தார். அவருடன் மோடி படம் பொறிக்கப்பட்ட பனியன்கள், தொப்பிகள் அணிந்தவர்கள் உடன் சென்றனர். வீடு, வீடாகச் சென்று அவர் வாக்குகள் சேகரித்தார்.

தேமுதிக, பாமக வேட்பாளர்கள்

தேமுதிக சார்பில் போட்டியிடும் குமார் தியாகராய நகர் போக் சாலையில் உள்ள மண்டபத்தில் நேற்று நடைபெற்ற தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி - தமாகா செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்றார். கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளை வீடு, வீடாகச் சென்று அவர் சந்தித்து வரு கிறார்.

பாமக வேட்பாளர் வினோத் கடந்த ஒரு வாரமாக வீடு, வீடாகச் சென்று பிரச்சாரம் செய்து வருகிறார். நேற்று தியாகராய நகரில் நடைபெற்ற கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் அவர் பங்கேற்றார். மாலையில் வீடு, வீடாகச் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

வேட்புமனுதாக்கல் தொடங்காத நிலை யில் அதிமுக, திமுக, பாஜக, தேமுதிக, பாமக கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x