

புதுச்சேரி: எஸ்சி, எஸ்டி சிறப்புக்கூறு நிதியை முழுமையாக செலவிடாததைக் கண்டித்து, புதுச்சேரி சட்டப்பேரவையை முற்றுகையிட வந்தவர்களை போலீஸார் தடுத்ததால் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
புதுச்சேரியில் எஸ்சி, எஸ்சி மக்களுக்கான சிறப்புக்கூறு நிதி முழுமையாக செலவிடப்படாததைக் குறிப்பிட்டு புதுவை தலித் மற்றும் பழங்குடி இயக்கங்களின் கூட்டமைப்பின் சட்டப்பேரவையை இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர்.
இதற்காக அண்ணாசிலை அருகே ஒன்றுகூடினர். அங்கிருந்து ஊர்வலமாக நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சட்டப்பேரவை நோக்கி வந்தனர். ஊர்வலமாக வந்த போராட்டக்குழுவினரை போலீஸார் ஆம்பூர் சாலையில் தடுத்து நிறுத்தினர்.
போலீஸாரின் தடுப்புகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டோர் தடுப்புகள் மீது ஏறியும், தடுப்புகளை தள்ளிவிட்டும் சட்டப்பேரவைக்குள் நுழைந்தனர். இதையடுத்து சட்டப்பேரவை நுழைவாயில் கதவு மூடப்பட்டது. இதனால் முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்கள் சட்டப்பேரவை முன்பாக தரையில் அமர்ந்து கண்டன கோஷங்கள் முழுங்கி, போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சட்டப்பேரவையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்தனர்.
முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்டோர், "நடப்பு நிதியாண்டுக்கான எஸ்சி எஸ்டி சிறப்புக்கூறு துணைத் திட்ட நிதியை முழுமையாக புதுச்சேரி அரசு செலவிடவில்லை. ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை இலவசம் என்ற விசயத்தில் பாரபட்சம் காட்டக்கூடாது, நிதியை முழுமையாக செலவிடாத அதிகாரி மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டப்பேரவையை முற்றுகையிடுவோம் என்று அறிவித்து போராட்டத்தை நடத்துகிறோம்" எனக் கூறினர்.