சிறையில் சொகுசு வசதிகள் செய்துதர லஞ்சம் கொடுத்த வழக்கு: சசிகலா, இளவரசிக்கு முன்ஜாமீன்

சசிகலா மற்றும் இளவரசி | கோப்புப் படம்
சசிகலா மற்றும் இளவரசி | கோப்புப் படம்
Updated on
1 min read

பெங்களூரு: சிறையில் சொகுசு வசதிகள் செய்துதர லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் சசிகலா, இளவரசி ஆகியோருக்கு முன்ஜாமீன் வழங்கி பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலா 4 ஆண்டுகள் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தண்டனை காலத்தில் சசிகலா, இளவரசி ஆகியோர் சிறையில் சிறப்புச் சலுகை பெறுவதற்காக அதிகாரிகளுக்கு ரூ. 2 கோடி லஞ்சம் கொடுத்ததாக அப்போதைய சிறைத்துறை டிஐஜி ரூபா புகார் தெரிவித்தார்.

இதுகுறித்து விசாரித்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையிலான குழு, 'சசிகலா சிறப்புச் சலுகைகளை அனுபவித்தது உண்மை' என 245 பக்க அளவில் அறிக்கை அளித்தது. இதையடுத்து ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் சிறைத் தலைமை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார், கண்காணிப்பாளர் அனிதா, ஆய்வாளர் பி.சுரேஷா, துணை ஆய்வாளர் கஜராஜா, ச‌சிகலா, இளவரசி ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு பெங்களூரு மாநகர 24-வது அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி லட்சுமி நாராயண பட் முன்னிலையில் கடந்தமுறை விசாரணைக்கு வந்தது. அப்போது, கிருஷ்ணகுமார், அனிதா, பி.சுரேஷா, கஜராஜா, ச‌சிகலா, இளவரசி ஆகிய 6 பேரும் மார்ச் 11‍-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் இந்த வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் சசிகலா, இளவரசி ஆகியோர் இன்று நேரில் ஆஜராகினர். இருவரும் இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்கக் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் சசிகலா, இளவரசி உள்பட 4 பேருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in