Published : 13 Apr 2016 03:07 PM
Last Updated : 13 Apr 2016 03:07 PM

ஒருவரையொருவர் புகழ்ந்த அமைச்சர், முன்னாள் மேயர்: அதிமுகவினரை வியக்கவைத்த இணைந்த கைகள்!

மதுரை மேற்குத் தொகுதியில் நேற்று நடந்த அதிமுக தேர்தல் அலுவலகத் திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் செல்லூர் கே. ராஜூவும், முன்னாள் மேயர் வி.வி. ராஜன்செல்லப்பாவும், ஒருவரை ஒருவர் புகழ்ந்துகொண்டதால் அதிமுகவினர் வியப்படைந்தனர்.

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் மதுரை மேற்குத் தொகுதி தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

இந்த விழாவில் அமைச்சர் செல்லூர் கே. ராஜூவும், முன்னாள் மேயரும், புறநகர் மாவட்டச் செயலாளருமான வி.வி. ராஜன்செல்லப்பாவும் ஒருவரை ஒருவர் புகழ்ந்து பேசினர். அதிமுகவில் எதிர்எதிர் துருவங்களாகச் செயல்படும் இருவரும் இவ்வாறு பேசியது அதிமு கவினரை வியப்படையச் செய்தது.

வி.வி. ராஜன்செல்லப்பா பேசியதாவது: மதுரை மேற்குத் தொகுதியில் அமைச்சர் செல்லூர் கே. ராஜூ, தினமும் வலம் வந்தவர். ஒரே துறையில் அமைச்சராக சிறப்பாகப் பணியாற்றியுள்ளார். சாதாரணமாக இந்தநிலைக்கு அவர் வந்து விடவில்லை. கிளைச் செயலாளர், பகுதிச் செயலாளராக பணியாற்றி எம்எல்ஏவாகி, அமைச்சராகியுள்ளார். முதல்வருக்கு சோதனைகள் வந்த போதெல்லாம், அவர் அதில் இருந்து விடுபட பல்வேறு பிரார்த்தனை நிகழ்வுகளை முன்னோடியாக இருந்து மதுரையில் நடத்தினார். ஊடகங்கள் நம்மிடையே உரசல் இருப்பதாகவும், தவறுகள் இருப்பதாகவும் சுட்டிக் காட்டினாலும் அதைப்பற்றி சிந்திக் காமல் எதிரிகளை வீழ்த்துவதில் கவனமாக இருக்க வேண்டும். இன்னும் ஒரு மாதம் ஓயாமல், உறங்காமல் பணியாற்றி 10 தொகுதிகளிலும் அதிமுகவை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றார்.

அமைச்சர் செல்லூர் கே. ராஜூ பேசும்போது வி.வி. ராஜன் செல்லப்பாவை அண்ணன் எனக் குறிப் பிட்டு பாராட்டி பேசினார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், மக்களவைத் தேர்தல் மூலம் அதிமுக தேசிய அளவில் மூன்றாவது பெரிய கட்சியாக ஆனது. தற்போது சட்டப் பேரவைத் தேர்தல் மூலம் 234 தொகுதிகளிலும் வெற்றிபெற்று சரித்திர சாதனை படைக்கும் என்றார்.

வேட்பாளரை அறிவிக்காமல் திமுக திணறல்

இந்த விழாவில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியது:

அதிமுக 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடக்கிறது. திமுகவினர் இன்னும் வேட்பாளர்களை அறிவிக்க முடியாமல் திணறுகின்றனர். புத்தகமாக அச்சடித்து வெளியிடுவது மட்டுமே தேர்தல் அறிக்கை இல்லை. அதில் இடம்பெற்ற திட்டங்களை கடைக்கோடி சாமானியனுக்கும் சென்றடைய வைக்க வேண்டும். அதிமுக வேட்பாளர்களுக்காக யாரும் வாக்களிப்பதில்லை. முதல்வர் ஜெயலலிதாவுக்காகத்தான் மக்கள் வாக்களிக்கிறார்கள் எதிர்முனையில் எப்பேர்பட்ட சூரர்கள் நின்றாலும் அவர்கள் அதிமுகவால் வீழ்த்தப்படுவர் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x