Published : 11 Mar 2022 07:37 AM
Last Updated : 11 Mar 2022 07:37 AM
விழுப்புரம்: மரக்காணம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று அதிகாலை நடந்த சாலை விபத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினரின் மகன் உயிரிழந்தார்.
திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோ. இவர், சென்னை, அண்ணா நகரில் வசித்து வருகிறார். இவரது மகன் ராகேஷ் ரங்கநாதன்(21). இவர், தனது நண்பர் சென்னையைச் சேர்ந்த வேதவிகாஷ்(21) என்பவருடன் நேற்று முன்தினம் நள்ளிரவு ஜீப்பில் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு கிழக்கு கடற்கரை சாலை வழியே வந்தார்.
நேற்று அதிகாலை விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த கீழ்ப்புத்துப்பட்டு அருகே சென்றபோது சாலையில் திடீரென மாடுகள் குறுக்கே வந்துள்ளன. இதனைஎதிர்பாராத ராகேஷ் ரங்கநாதன் உடனே காரை திருப்பியுள்ளார். அப்போது, கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலை நடுவில் உள்ள தடுப்பு கட்டை மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. ராகேஷ் ரங்கநாதன் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். அவரது நண்பர் வேதவிகாஷ் பலத்த காயமடைந்தார்.
கோட்டக்குப்பம் போலீஸார் வேதவிகாஷை மீட்டு, புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக கோட்டக்குப்பம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல்வர் அஞ்சலி
திமுக எம்பி என்.ஆர்.இளங்கோவின் மகன் ராகேஷ் ரங்கநாதன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது இல்லத்துக்கு நேரில் சென்று உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். மகனை இழந்து வாடும் என்.ஆர்.இளங்கோ மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
மக்களவை உறுப்பினர் கனிமொழி, அமைச்சர்கள் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT