Published : 11 Mar 2022 04:00 AM
Last Updated : 11 Mar 2022 04:00 AM

பொள்ளாச்சி: டாப்சிலிப்பில் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி தீவிரம்

உலாந்தி வனச்சரகத்தில் காட்டுத்தீ ஏற்படுவதை தடுக்க சாலையோரத்தில் உள்ள புதர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர்.

பொள்ளாச்சி

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள டாப்சிலிப் வனச்சரக பகுதிகளில் தீத்தடுப்பு கோடுகள் அமைத்தல் மற்றும் சாலையோர புதர்கள் அகற்றும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள முக்கிய பல்லுயிர் பெருக்கமண்டலமாக ஆனைமலை புலிகள் காப்பகம் உள்ளது. இந்த காப் பகத்தின் பொள்ளாச்சி கோட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, வால்பாறை, உலாந்தி, மானாம்பள்ளி ஆகியவனச்சரகங்களுக்கு, ஆயிரக்கணக் கான சுற்றுலா பயணிகள் வந்துசெல்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் மே வரையிலான காலகட்டத்தில் கோடை வெயில் மற்றும் சுற்றுலா பயணிகள் வனப்பகுதியில் தீப்பிடிக்கும் பொருட்களை பயன்படுத்துதல் ஆகியவற்றால் காட்டுத்தீ ஏற்படுகிறது.

இதை தடுக்க காப்பகம் முழுவதும், சுமார் 170 கிலோ மீட்டர் தொலைவுக்கு, தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அத்துடன், சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளை பார்வையிட, டாப்சிலிப் வழித்தடத்தை வனத்துறையினர் சுத்தம் செய்யும் பணியை தொடங்கியுள்ளனர்.

இது குறித்து உலாந்தி வனச்சரக அலுவலர் காசிலிங்கம் கூறியதாவது:

உலாந்தி வனச்சரகத்தில், தண்ணீர் பள்ளம் பகுதியிலிருந்து டாப்சிலிப் வரையில் 70 கி.மீ., தொலைவுக்கு தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சேத்துமடை சோதனைச்சாவடி அருகில் தொடங்கி டாப்சிலிப் வரையில் சாலையோரத்தில் யானைகள், புள்ளி மான்கள், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகளை சுற்றுலா பயணி கள் எளிதாக காணமுடிகிறது.

சுற்றுலா பயணிகள் எளிதாக வனவிலங்குகளை காணவும், சுற்றுலா பயணிகளால் காட்டுத்தீ ஏற்படுவதை தவிர்க்கவும், சேத்துமடை சோதனைச்சாவடி அருகில் இருந்து கோழிகமுத்தி வரையில் சாலையின் இருபுறமும், மூன்று முதல் ஆறு மீட்டர் வரையில் காய்ந்த புதர்களை அகற்றி சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x